“
இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” பிரஜாசக்தி தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பாண்டிருப்பு, கல்முனை உள்ளிட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக சமூக மட்டத்தில் மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தி, தன்னிறைவு கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் குறைந்தபட்சமாக 1.3 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டு, தனிநபர் மற்றும் குழு அடிப்படையிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குடிசைத் தொழில்கள், கைத்தொழில்கள் மற்றும் பல்வேறு வருமானம் ஈட்டும் திட்டங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இத்திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.
நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. ரி.ஜே. அதிசயராஜ், தேசிய மக்கள் சக்தியின் கல்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பாளரும் பிரஜா சக்தி மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா அமைப்புகளின் பிரதிநிதியுமான பொறியியலாளர் வி.ரி. சம்பந்தன், பிரஜா சக்தி அமைப்பின் தவிசாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு பொதுமக்களின் ஆர்வமிக்க பங்கேற்புடன் வெற்றிகரமாக இடம்பெற்றது.
















