பொத்துவில்:

பொத்துவில் மீள்குடியேற்ற கிராமமான கனகர் கிராமத்தில், அங்கு வாழும் மக்களின் மிக அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீர் கிணறு ஒன்று உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. ‘வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா’ அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக் கிணறு, இன்று (23.05.2026) திறந்து வைக்கப்பட்டது.

​பொத்துவில் கனகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. S. செல்வகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், கனகர் கிராமத்துக்குப் பொறுப்பான கிராம சேவையாளர் திரு. T. ராஜேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. காண்டீபன் மற்றும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என் சௌவியதாசன் கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

​‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் பணிப்பாளர் திரு. விசு கணபதிப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே, வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டு இக்குடிநீர் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

​இக்கிராமத்தில் சுமார் 73 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இதுவரை இரண்டு பொதுக்கிணறுகள் மாத்திரமே பாவனையில் இருந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும், தமது வாழ்வாதாரத் தோட்டப் பயிர்ச்செய்கைகளுக்கான நீரைப் பெற்றுக் கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

​தமது நீண்டநாள் தேவையறிந்து இப் பொதுக்கிணற்றைப் பெற்றுத் தந்தமைக்காக, வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பின் தலைவர் திரு. கல்யாணசுந்தரம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்குக் கிராம மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவ்வாறான பொதுக் கிணறுகளைத் தேவைகளுள்ள ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து அமைத்துத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.