களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும் – 2026.03.16.
செல்லையா பேரின்பராசா
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது இன்றைய தினம் (2026.03.16) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையின் கீழ், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரனின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், பொருளாதார ரீதியாக வலுவடைவதற்கும் ஒரு சிறந்த தளத்தை உருவாக்குவதே இக் கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.
இந்த கண்காட்சியில் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய உணவுப் பொருட்கள், ஆடை வகைகள், கைத்தறி கைவினைப் பொருட்கள் மற்றும் கண்ணைக் அலங்காரப் பொருட்கள் என்பன காட்சிக்காகவும் விற்பனைக்காவும் வைக்கப்பட்டிருந்தது.
இதன் போது பிரதேச செயலக பிரிவிலிருந்து 20 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி மற்றும் கைவினை பொருட்களை காட்சிப்படுத்தியதுடன், விற்பனையும் செய்திருந்தனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மற்றும் விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.















