ஜனாதிபதிக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார்  நன்றி தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள இந்திய பெருங்கடல் பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் நாட்டின் கப்பலையும் அதில் பயணித்த மாலுமிகளையும் மனிதபிமான முறையில் காப்பாற்றுவதற்கு முன்னின்ற இலங்கை ஜனாதிபதி அதிமேதகு அனுரகுமார திசநாயக்க அவர்களுக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

சமகால வளைகுடா யுத்த நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்,

தற்போது சர்வதேச அரங்கில்  அமெரிக்க, இஸ்ரேல்,மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான மும் முனை போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அப்பாவி உயிர்கள் பலி எடுக்கப்படுவது போன்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதுடன்,
இலங்கையின் காலி (Galle) துறைமுகத்திற்கு தெற்கே சுமார் 40 மைல் கல்  தொலைவில் பயணித்த  ஈரானிய கடற்படையின்  IRIS Dena போர்க்கப்பல் அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் பயணித்த 32 கடற்படை மாலுமிகளை இலங்கை அரசாங்கம் உயிருடன் மீட்டு காப்பாற்றிய நடவடிக்கைக்கு நாம் கௌரவமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கப்பாலில் உயிரிழந்தவர்களின் உடல்களை கரைக்கு கொண்டு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் மறுநாள்(05) மற்றொரு ஈரானிய கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நிலையில் அந்தக் கப்பலில் வந்த பயணிகளை மீட்டெடுத்தது கப்பலையும் பாதுகாப்பாக திருகோணமலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த எமது நாட்டின் ஜனாதிபதிக்கு நாம் கௌரவமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

துணிகரமான இந்த செயல்பாட்டை மேற்கொண்ட  இலங்கை கடற்படை வீரர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.