பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த H.N.D. in English பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகள், தங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, தமக்கு நியமனம் வழங்க கோரி அமைச்சரிடம் அதிகாரப்பூர்வ மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒன்றிய தலைவர் கணேசராஜா கேதிக்ஷன் அது தொடர்பான மகஜரை, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறித்த பாடநெறியில் கல்வி பயின்ற மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்களையும் பயிற்சிகளையும் முழுமையாக நிறைவு செய்து, 2024 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றுள்ளனர். எனினும், நிர்வாக தாமதங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவர்களுக்கு இதுவரை அரசாங்க நியமனம் வழங்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசு ஆங்கில ஆசிரியர் விண்ணப்பங்களை கோரி கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் போட்டி பரீட்சை வைத்து ஒரு தொகுதியினருக்கு நியமனம் வழங்கியது. பின்னர் பட்டதாரிகளுக்கு மாத்திரம் 2024 இல் நியமனம் வழங்கியது .
இவற்றில் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.
நீண்டகாலமாக கல்வி பயின்று தகுதி பெற்றுள்ள டிப்ளோமா பட்டதாரிகள் நாம் வேலைவாய்ப்பு இன்றி இருப்பது அவர்களின் பொருளாதார நிலைமைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வயது ஏறி வருவதாகவும்,குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், நாட்டின் கல்வித்துறையில் ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கான தேவைகள் அதிகரித்து வரும் இந்நிலையில், தங்களது தகுதிகளை பயனுள்ளதாக பயன்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, 2016–2021 காலப்பகுதியில் H.N.D. in English பாடநெறியை நிறைவு செய்த அனைத்து டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் விரைவாக நியமனம் வழங்க கல்வி அமைச்சர் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. தேவையெனில் நிபந்தனையுடன் பட்டப்படிப்புக்கான தேவையை பூர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம்.
இவ்விடயம் தொடர்பாக சாதகமான தீர்வு கிடைக்கும் என பட்டதாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
