காத்திரமான கல்விப்பணி புரிந்தவர் அமரர் மு.பரஞ்சோதி.

செல்லையா பேரின்பராசா

சைவத்தையும் தமிழையும் வாழவைப்பதற்காக அயராது உழைத்த காரைநகரைச் சேர்ந்த அருணாச்சலம் உபாத்தியாயர் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தோற்றம் பெறுவற்கு அடித்தளம் இட்டவர். இதனை பழைய புத்தகங்களிலும் இணையத்தளங்களிலும் காண முடியும். அஃதே காரைநகரைச் சேர்ந்த பலர் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த வழியில் போர்ச் சூழல் நிலவிய இடர்மிகுந்த காலமாகிய  1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக் கலாசாலயின் அதிபராகவிருந்து  வழிநடாத்திய பெருமகன் மு.பரஞ்சோதி ஐயா இக் கலாசாலை வரலாற்றில் தனது அர்ப்பணிப்பான சேவைகளால் தடம் பதித்த ஒருவர்.

இவ்வாறு கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முதல்வரும் பட்டிமன்றப் பேச்சாளருமான சந்திரமௌலீசன் லலீசன் புகழாரம் சூட்டினார்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் முன்னாள் பிரதி முதல்வரும் கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் முதல்வருமான மு.பரஞ்சோதி அவர்களுக்கான அஞ்சலிக் கூட்டம் ஆசிரியர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் காரைநகரில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த அஞ்சலிக் கூட்டத்தில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முதல்வரும் பட்டிமன்ற பேச்சாளருமான சந்திரமௌலீசன் லலீசன் அங்கு மேலும் பேசுகையில்.

அமரர் மு.பரஞ்சோதி ஐயா கணித பாட விரிவுரையாளர் மட்டுமன்றி சிறந்த பண்பாளர் இவர் தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு நன்றி உணர்வை சிறப்பாக போதித்துள்ளார். தற்காலத்தில் நன்றி உணர்வை காண்பது அரிது. எனினும் இவரிடம் 36 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய பற்சி கலாசாலையில் பயின்ற ஆசிரிய மாணவர்கள் யாழ் காரைநகர்  மண்ணின்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவது அன்னாரின் சேவைக்கு சிறந்த சான்று.

இந்த உலகில் பிறந்த ஒவ்வருவரும் என்றோ ஓர் நாள் இறந்தே ஆகவேண்டும். இன்று மலர் மஞ்சத்தில் நீள் உறக்கம் கொள்ளும் பரஞ்சோதி ஐயா பிறர் தலையை தடவி வளர்த்த பெருமகன். இதன் பயனாக அன்னாரின் பிள்ளைகளும் சமூகத்தில் சிறப்பாக உள்ளதை நாம் காணலாம்.

அமரர் பரஞ்சோதி ஐயா என்னை நேரில் காண அவாவுற்றுள்ளதாக கல்வி அமைச்சில் பெரும் பதவி வகிக்கும் காரைநகரைச் சேர்ந்த பத்மானந்தன் ஐயா கூறியிருந்தார் இதற்கமைய கடந்த வருடம் இதே தினத்தில் இங்கு வந்து சந்தித்த போது அவர் ரமணிச்சந்திரன் சாண்டில்யன் போன்றவர்களின் நூல்களை வாசித்த வண்ணம் அந்திம காலத்திலும் வாசிப்பில் மூழ்கியிருந்தார்.

இந்த உலகில் என்ன பெருமை என்று கேட்டால் ஆள் ஆள் வெவ்வேறு விடை கூறுவோம். ஆனால் வள்ளுவர் நேற்று இருந்தவர் இன்றிருக்க நிச்சயம் கிடையாது என்கின்றார். இதுதான் மனித வாழ்க்கை. இதற்குள் நாம் மற்றவர் மதிக்கும் வண்ணம் அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும். இதனை கச்சிதமாக நிறைவேற்றி பரஞ்சோதி ஐயா விடைபெற்றுச் சென்றுள்ளார் என்றார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் ஓய்வுநிலை ஆசிரியர் துரை கணேசமூர்த்தி மட்டக்களப்பில் இருந்து வருகைதந்த ஓய்வு நிலை அதிபர் க.பகீரதன் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுநிலை அதிபருமான செல்லையா பேரின்பராசா ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர். மட்டக்களப்பில் இருந்து ஓய்வுநிலை அதிபர்களான நா.சந்திரலிங்கம் த.பூவேந்திரன் சீ.பாலசிங்கம் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.