கலைஞர்.ஏ.ஓ.அனலின் “பூக்களின் புது உலகம்” தேசிய விருது வென்றது.
புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் அரச உத்தியோகத்தர்களுக்கு பல போட்டிகளை நடாத்தி, அதில் வெற்றி பெற்றவர்களை கெளரவித்து வருகிறது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தரின் ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவானது அண்மையில் கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.
அமைச்சின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலய ஓவிய ஆசிரியர், கலைஞர்.ஏ.ஓ.அனல் எழுதிய “பூக்களின் புது உலகம்” என்ற கவிதை தேசிய மட்டத்தில் மூன்றாவதாக தெரிவு செய்யப்பட்டு, தேசிய விருதினை பெற்றுக்கொண்டது. 2021, 2022, 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில், முறையே பாடலாக்கம், கவிதை மற்றும் சித்திரப் போட்டிகளில் தேசிய விருதினைப் பெற்றுக்கொண்ட கலைஞர், மாகாண மட்டத்திலும் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்று பட்டிருப்பு வலயத்தில் பல் துறைத் கலைஞராக சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


