38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு..

( வி.ரி.சகாதேவராஜா)

கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம்  நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது.

அங்கிருந்த காரைதீவு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள் காணிகள் உரியவர்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் கல்முனை கட்டளைத்தளபதி அதற்கான உரிய ஆவணங்களை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளரிடம் நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இங்கு நிலைகொண்டிருந்த சுமார் 50 இராணுவத்தினர் கல்முனை இராணுவ முகாமிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

 காரைதீவு கிராமம் கடந்த 1985, 1988, மற்றும் 1990 களில் பாரிய வன்முறைக்கு இலக்காகி பாரிய அழிவைச் சந்தித்திருந்தமை தெரிந்ததே.

 அதனால் 1988 களில் இருந்து அங்கு ராணுவம் , விசேட அதிரடிப்படை  , இந்திய அமைதிகாக்கும் படை மற்றும் உளவு பிரிவினர் மாறி மாறி தொடர்ச்சியாக தங்கி வந்தனர். நேற்று முன்தினம் மாலை உடன் இந்த ராணுவ முகாம் பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இருந்த பொழுதிலும் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் 3 இராணுவத்தினர் இன்னும் ஒரு வார காலத்திற்கு அங்குள்ள வாசஸ்தலத்தில் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது .

இது தொடர்பாக காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் கூறுகையில்..

கரைதீவு இராணுவ  முகாம் அகற்றப்படுவது தொடர்பாக கல்முனை பிராந்திய கட்டளை தளபதி எங்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை அழைத்து எங்களிடம் அந்த பத்திரங்களை கையளித்தார் . புலனாய்வு பிரிவினரும் விரைவில் அகற்று விடுவார்கள்என்றார்.

மக்களின் கருத்து:

இதேவேளை  “காரைதீவு இராணுவ முகாம் அகற்றப்பட்டிருக்கக் கூடாது .எமக்கு பாதுகாப்பு இல்லை.எனவே பொலிசாரோ யாரோ அங்கு நிலை கொள்ள வேண்டும்” என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

இன்னும் சிலர் “இந்த முகாம் அகற்றப்படுவதனால் பிரதேச சபைக்குரிய வருமானம் அதிகரிக்கும். பிரதேச செயலகத்தின் ஒரு பகுதி இங்கும்இயங்கலாம். பிரதேச சபை வருமானம்  ஏற்பாடுகளையும் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.