கதிர்காம இந்துகலாசார மண்டபத்தில் சிவபூமி அன்னதான சபையினரின் அன்னதானம் !

( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன்  ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டி வழமைபோல இம்முறையும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினர் கதிர்காமம் இந்து கலாசார மண்டபத்தில் மூன்றுவேளையும் அன்னதானம் வழங்கிவருகின்றனர்.

அன்னதானத்தின் அங்குரார்ப்பணநிகழ்வு கொடியேற்றதினத்தன்று விசேடபூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

 அன்னதானத்திற்கான

தொண்டர்சபையின் பொறுப்பாளர் குழுவினர் தினமும் இவ்வன்னதானத்தை சிறப்பாக நடாத்திவருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தினமும் அங்கு வரிசையாக்கம் சென்று அன்னதானத்தில் பங்கேற்று வருகின்றனர்.

அதைவிட காலையும் மாலையும் கோப்பியும் தேநீரும் வழங்கிவருகின்றனர். எதிர்வரும் தீர்த்தம் வரை இப் பணி தொடரும்.

தினமும் 5000 – 6000  அடியார்கள்  அன்னதானத்தில் பயன்பெறுவதாக அங்குள்ள விடுதி பொறுப்பாளர் எஸ்.சாரங்கன் தெரிவித்தார்.

இதனை கடந்த பலவருடங்களாக நடாத்திவந்த பொறுப்பாளர் ரி. ஞானசுந்தரம் காலமானதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகள்  ஒத்துழைப்புடன் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவர்கள் கூறுகையில்.வழமைக்குமாறாக இம்முறை மரக்கறிகளின் விலைகள் உச்சக்கட்டத்திலுள்ளன. எனினும் தினமும் 3வேளையும் உணவளித்துவருகின்றோம். 20மைலுக்கு அப்பாலுள்ள சிங்களக்கிராமமான பண்னேகமவிற்கு  சென்று மரக்கறிகளை கதிர்காம வர்த்தகர்   உதவியுடன் கொள்வனவுசெய்துவருகின்றோம். வழமைபோன்று எமக்கு

ஆதரவளித்துவரும் வர்த்தகர்கள் பரோபகாரிகள் தொடர்ந்தும் உதவுவதனால்இது சாத்தியமாகின்றது.

 தலைவர் கே.தவயோகராஜா   எஸ்.பேரின்பநாயகம் உபதலைவர் ரி.குழந்தைவேல் ஆகியோர் இப்பாரிய மனிதசேவையைச்செய்ய தொடர்ந்து செய்ய ஒத்தாசை புரிந்துவருகின்றனர்.

கொழும்பு வவுனியா வர்த்தகர்களின் உதவியோடு கடந்த பலவருடங்களாக இவ் அன்னதானம் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.