33 வருட கல்விச் சேவையிலிருந்து அதிபர் சுந்தரநாதன் ஓய்வு;
பிரியாவிடை வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்!
( வி.ரி.சகாதேவராஜா )
33 வருட கால கல்விச் சேவையிலிருந்து முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் வயிரமுத்து சுந்தரநாதன் நேற்று(26), திங்கட்கிழமை தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.
அவரது சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை வைபவமும் நேற்று பிரதி அதிபர் எஸ்.கிருபாகரன் தலைமையில் பாடசாலையில் கோலாகலமாக நடைபெற்றது .
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக அதிபரின் சிவானந்தா நண்பர்களான ஓய்நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு நிலை அதிபரும் முன்னாள் தவிசாளருமான சிவ. அகிலேஸ்வரன், ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் .
அங்கே பணிப்பாளர் ஜெயச்சந்திரன் உரையாற்றுகையில்..
மிகவும் வசதி குறைந்த வலயத்துக்கு வருகை தந்த பொழுது என்னை முதன் முதலில் வரவேற்றவர் அதிபர் சுந்தரநாதன் அவர்கள்.
அவர் பணியாற்றிய பாடசாலைகள் எல்லாம் பாடசாலையின் தரத்தை உயர்த்தியது மட்டும் இல்லாமல் மாணவர்களின் அடைவு வீதத்தையும் உச்ச கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றார். இவர் போன்ற அதிபர்கள் உருவாக வேண்டும் .
ஒருவர் ஓய்வு பெறுகின்ற பொழுது இன்னும் சில காலம் இவர் பணியாற்ற கூடாதா? அவரை பணிக்கு இன்னும் சில காலம் அமர்த்தித் தாருங்கள் என்று பலரும் கேட்க வேண்டும் .
அப்படி ஒருவரது சேவை அமைய வேண்டும்.
அப்படி பார்த்தால் திரு சுந்தரநாதன் அவர்கள் 100% அர்ப்பணிப்பான சேவையாற்றி விட்டு இன்று எம்மை விட்டு போகின்றார். அவரது ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள் . என்றார்
ஓய்வு நிலை பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா பேசுகையில் ..
நண்பர் சுந்தரநாதன் நாங்கள் எல்லாம் சிவானந்தாவிலே ஒன்றாக படித்தவர்கள். விளையும் பயிரை முளையில் தெரியும் என்பார்கள் . அன்றே அவரது ஆளுமையை என்னால் காணக்கூடியதாக இருந்தது .
அவர் சேவையாற்றிய பன்சேனை வித்தியாலயம், காயான்மடு வித்தியாலயம், கொத்தியாபுல வித்யாலயம், இறுதியாக முதலைக்குடா மகா வித்தியாலயம் எல்லாம் உச்சகட்ட அபிவிருத்தியை கண்டிருக்கின்றது. மாணவர்களின் அடைவு மட்டமும் உச்சத்தை அடைந்திருக்கின்றது . வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மேற்கு வலயம் அன்று ஒரு சிறிய புள்ளியாக இருந்தது .இன்று சகல பரீட்சைகளிலும் புறக் கிருத்திய செயற்பாடுகளிலும் அடைவு மட்டங்கள் முதலிடத்தை வகிக்கின்றது . கிழக்கில் முன்னணி வலயமாக தலைசிறந்து விளங்குகிறது.
அந்த வகையிலே நண்பர் ஜெயச்சந்திரன் மிகவும் அர்ப்பணிப்பான சேவையை செய்திருக்கின்றார். வாழ்த்துக்கள் .
இறுதியாக ஓய்வுபெறும் அதிபர் சுந்தரநாதன் அவர்களுக்கு, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் அவரது சிவானந்தா நண்பர்களான சிவ.அகிலேஸ்வரன் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார்கள்.
கோட்ட அதிபர்கள் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
திரு.சுந்தரநாதன் இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபராவார். கல்வி சமய சமூக பொருளாதார ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.






