பாறுக் ஷிஹான்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம்



இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்   உப வேந்தர்   பதவிக்காலம்  நிறைவடைந்த  நிலையில் கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது.

 புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த காலத்தில் நடைபெற்ற நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத்  பதில் உப வேந்தராக செயற்பட்டு வந்தார்.

இந்நிலையில் பேரவையின் பரிந்துரை  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கமைவாக  பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியால் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி  பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மே மாதம் 26 ஆந்  திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.