வாக்குகளுக்காக போட்டிபோட்டு இனவாதமாக செயற்படும் ஹரீஸ்,  முஷாரப் – ஜெயசிறில் காட்டம்!

இனவாத அரசியலுக்கு மக்கள் துணைபோக கூடாது  அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் நூறு வீதம் நியாயம் இருந்து அப்பிரதேச மக்களின் அரச சேவையை பெறும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருவதுடன்; அத்துமீறிய நிருவாக தலையீடு இடம் பெறுவதும் வெளிப்படை இதனை கண்டித்து மக்கள் அகிம்சை முறையில் ஒரு மாதம் கடந்து போராடி வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை நியாயமற்ற முறையில் தடுப்பதும் அதிகாரம் வழங்கப்படுவதால் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு எனும் பொய்யான மாயையை தோற்றுவித்து வங்குரோத்து அரசியலுக்காக முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக  தங்களை கதாநாயகனாக காட்டும் இனவாத அரசியலை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ் மற்றும் முஷாரப் ஆகியோர் போட்டி போட்டு செயற்படுகின்றார்கள் என காரைதீவு பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்தார்.

கல்முனைக்கென 29 க்கு மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன தனியான கட்டிடம் அலுவலகம் ஆளணி பௌதீக வளங்களுடன் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அமைச்சரவை தீர்மானத்துடன கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தனியாக இயங்கி வருகின்றது.  அத்தனை தகுதியும் இருந்தும் இந்த மக்களின் அரச சேவையை பெறுவதற்கு இனவாத அரசியலுக்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடுவதற்கு அரசாங்கம் இனியும் அனுமதிக்ககூடாது  இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சுயலாப அரசியலுக்காக ஒரு பிரதேச மக்களின் அடிபபடை உரிமையை தடுப்பதானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே மேலும் பகைமை உணர்வையே தூண்டும் . இன முறண்பாட்டை தோற்றுவித்து முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற இவர்கள் செய்யும் கேவலமான அரசியலுக்கு முஸ்லிம் மக்கள் துணைபோக கூடாது.

மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  பிரதேச செயலகங்களிலும் கடந்த காலத்தில் தனித்தனியாகவே இடம்பெற்றுள்ளது குறிப்பாக கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு தனியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு தனியாகவே இடம்பெற்றுள்ளன.  தற்போது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு தனியாக நடத்த முடியாது என புதிதாக கதைவிடுவதும் அதற்கு தன்னை ஒரு நடுநிலையாக காட்ட முயலுவதற்காக கூறும் காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாது . கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் நிருவாக அத்துமீறலை மக்கள் வன்மையாக எதிர்க்கின்றார்கள் ஆனால் முஷாரப் எம.பி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மீது மட்டும் குற்றம் சாட்டுவதானது அவரின் இனவாத மனநிலையையே வெளிப்படுத்துகின்றது.

கல்முனையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பகைத்துக்கொள்வது இரண்டு தரப்புக்கும் பாதிப்பே. வர்த்தகத்தில் அதிகமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றார்கள் தமிழ் வாடிக்கையாளர்களிலேயே இவர்களின் வியாபாரம் தங்கியுள்ளது. சில வர்த்தகர்களும் இனவாதத்துக்கு செயற்படுகின்றார்கள். கல்முனையில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தமிழ் மக்கள் புறக்கணித்து சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைக்கு  மட்டும் நாடினால் பாதிக்கப்படுவது கல்முனையில் வர்த்தகம் செய்யும் அப்பாவி வியாபாரிகளே ஆகவே திறந்த மனதுடன் இரு சமூகமும் அரசியல்வாதிகளின் வாக்கு அரசியலுக்கு இடமளியாது கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்துக்கு ஒரு தீர்வை விரைந்து காண வேண்டும் என்றார்.