அகில இலங்கை IORA தின ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு.

இலங்கை இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகளின் அமைப்பான IORA அமைப்பானது கல்வி அமைச்சுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ” எதிர்கால சந்ததியினருக்காக நிலைபேறான இந்து சமுத்திரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்திய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில்(10) காலி முகத்திடல் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. .

இலங்கை ஜனாதிபதி கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு ஆரம்பமான இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்துகொண்டனர். அகில இலங்கை ரீதியில் 7000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தாலும் 300 மாணவர்களே தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, அவர்களுள் ஒரு பாடசாலையிலிருந்து அதிகளவான மாணவர்கள் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.

துறைநீலாவணை பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக சித்திரப் பாட மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் பங்குபற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இம்மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை பாடசாலை அதிபர் திரு.ரீ.ஈஸ்வரன் மற்றும் பிரதி அதிபர்கள் மேற்கொள்ள, முறையான பயிற்சிகளை தேசிய கலைஞர் ஏ.ஓ.அனல் அவர்கள் வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.