பெண்கள், சமூக சிவில் செயற்பாட்டாளர்கள்,சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

வடகிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கண்டுமணி-லவகுசராசாவின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றிய தலைவர் சபாரெத்தினம் சிவயோகநாதன், மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள், பாதிக்கப்பட்ட மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும், தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், அவர்களை பின்தொடர்வதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவ்வேளையில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

அதுமட்டுமன்றி சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கியமான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்ற நிலைமைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிக்கின்றது.

இதனை நிறுத்தக்கோரி இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “பெண் சிவில் செயற்பாட்டாளர்களை தொல்லைப்படுத்தும் அச்சுறுத்தலை நிறுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி அவர்களை கைது செய்வதை நிறுத்து, உலக நாடுகளில் பேணப்படும் மனித உரிமைகள் பேணலை ஸ்ரீலங்காவில் அரசே நடமுறைப்படுத்து, எங்கே மனித உரிமை பேணப்படுகின்றது? ,என ஆட்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறு கோரிக்கையை முன்வைத்தார்கள்.

இவ்வாறான அசம்பாவிதங்கள், அநீதிகள் சிவில் அமைப்புக்களுக்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதன்பின்பு குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் உள்ள உத்தியோகஸ்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.