அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சினால் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டிய டொலர்கள்

சுற்றறிக்கையின் படி, தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் அரச ஊழியர்களில் ஆரம்ப நிலை ஊழியர்கள் 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை ஊழியர்கள் 200 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் நிலை ஊழியர்கள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையிலுள்ள வங்கிக் கட்டமைப்பு ஊடாக தமது பெயரில் உள்ள வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டும்.

அரச ஊழியர்கள் தங்களது சிரேஷ்டத்துவத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளில் தொழிலை மேற்கொள்ளலாம் எனவும் சம்பளமற்ற விடுமுறை காலம் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் அரச சேவையில் இணைந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள்

அரச சேவையில் எந்த வேலையும் இல்லாத 100,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அரச சேவையில் 16 இலட்சம் பேர் உள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கினர் தொழிலாளர்கள், சாரதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள். அரச சேவையில் குறிப்பிட்ட நிரந்தர பொறுப்பின்றி ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்கள் இருக்கின்றனர்.

தற்போதுள்ள அரச ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இல்லாவிட்டாலும் அரச சேவையை பேண முடியும். குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது. உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

https://49018384b5de82817124e707dfc336f7.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html