வாகரை பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலய அலங்கார உற்சவம் 2026
வியாழக்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு
பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.
இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, 27.08.2026 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்துவரும் நிகழ்வுடன் பால்சேனை நாகபுரம் மக்களால் சிறப்பாக விழா ஆரம்பிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் பக்தர்களின் பங்கேற்புடன் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.
அத்துடன், 28.08.2026 வெள்ளிக்கிழமை அதிகாலை தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதுடன், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
உற்சவகால நிகழ்வுகளுக்கு யாக பூசகர்களாக மயிலத்தங்கியமலை நந்திச்சார்த் திருக்கோயில் சிவத்திரு வே. பிரபாகரன் ஐயா மற்றும் சிவத்திரு ஸ்ரீ ஜீவராசா ஐயா ஆகியோர் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளனர்.
ஆலய பூசகர்களாக செ. யோகராசா மற்றும் இ. சிவலிங்கம் ஆகியோர் பணியாற்றவுள்ளனர். மங்கள வாத்தியம் வழங்கும் குழுவினராக ஜெகன் , விஜய் குழுவினர் பங்கேற்கின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாலய உற்சவத்தில் கலந்து கொண்டு கங்கா ஈச்சரரின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
“அனைவரும் வருக! எம்பெருமான் திருவருள் பெறுக!”



