சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக, இலங்கை அரசாங்கம் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜை சிவராசா அனோஜன் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.

எந்த மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும் அல்லது மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ள ஒன்றியம், அனைத்து மதங்களும் மனித கண்ணியம், பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் அமைதியையே போதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மத வெறுப்பைத் தூண்டும் கருத்துகள் மற்றும் செயல்களுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தாங்கள் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரம், பண்பாடு மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மரியாதை செலுத்தி நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும், குறிப்பாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது அதிக பொறுப்புணர்வுடனும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் தெரிவித்துள்ளது.