அதிகாரிகள் கவனிப்பார்களா?

( குமுக்கனில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)

உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தனை தரிசிக்க காட்டு வழி பாதயாத்திரை செய்யும் பக்க அடியார்கள் குமுக்கன் வனாந்தர பகுதியினை கடந்து செல்லும் போது பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

யாத்திரீகர்களின் பாதுகாப்பு கருதி தனியாவோ குழுவாகவோ வருவோர் பாதுகாப்பு பிரிவினரால் கணக்கிடப்படும் முறையால் பல மணிநேரம் சுமையோடு குழந்தைகளோடு கால்கடுக்க காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.

தற்போது யாத்திரீகர்கள் காலை 6.00 மணிக்கும் மாலை 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றய பகுதிக்கு காட்டு பகுதியினுடாக செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த நடைமுறை இம்முறையும் பின்பற்றப்படுகிறது.

ஆனால் குமுக்கன் ஆலயத்தில் இருந்து காலை 6.00 மணிக்கு வெளியாகுவதற்காக யாத்திரிகர்கள் கணக்கெடுப்புக்காக அதிகாலை 4.00 மணி முதல் பல மணிநேரம் காத்திருந்தும் 8 மணி வரை தாமதிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான அசெளகரியங்களை எதிர்வரும் காலங்களிலும் அடுத்த வருடத்திலும் மாற்றியமைக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

இதேபோல் முதல் நாள் 5.30 க்கு பாதை திறந்தும்  குமண நுழைவாயிலிலும் தாமதம் ஏற்பட்டது. பல மணிநேரம் சுமைகளோடு தாமதிக்க நேரிட்டது.

பொறுப்பு வாய்ந்த அம்பாறை மாவட்ட அரச அதிகாரிகள், பாதயாத்திரை தொடர்பான சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்பான அமைப்புக்கள் இது தொடர்பில் எதிர்வரும் காலங்ளில் கவனம் செலுத்தி உரிய கலந்துரையாடல் கூட்டங்களில் தெளிவுபடுத்தி சிறந்த தீர்மாங்களை பெற வழிவகை செய்ய வேண்டும் என யாத்திரீகர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

 யாத்திரிகர்களுக்காக காலை 6.00 மணிக்கு பாதை திறப்பதற்கு முன்னர் அதிகாலை முதலே (4.00) கணக்கெடுப்பினை மேற்கொள்ள ஆரம்பித்தால் யாத்திரிகர்கள் தாமதமின்றி 6.00 மணிக்கு வெளியேற முடியும். வெயிலுக்கு முன்னர் அடுத்த தங்குமிடத்தை அடையமுடியும்