AI PHOTO

களுத்துறையில் உள்ள நாகொட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பெண் மருத்துவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (14) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் அகலவத்தையில் உள்ள மஹகம பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

வலிப்பு நோய் மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் காரணமாக, மேலதிக சிகிச்சைக்காக அவர் மத்துகம பிம்பூர மருத்துவமனையிலிருந்து நேற்று (14) பிற்பகல் நாகொட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் சிகிச்சை பெற்று வந்தபோது, ​​அவரது இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வந்த பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், குறித்த பெண் மருத்துவர் அவரைக் கண்டித்து, இதுபோன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், அந்தப் பெண் மருத்துவர் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக் கருவியை இயக்க முயன்றபோது, ​​அந்த நோயாளி மீண்டும் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த மருத்துவர், நோயாளர் விடுதியின் பொறுப்பு பிரதம மருத்துவ அதிகாரியிடம் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்தார்.

அதன்படி, களுத்துறை தெற்கு காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.