கல்முனையைச் சேர்ந்த இளம் ஆன்மீகச் சொற்பொழிவாளரான நாகராஜா சனாதனன், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் திருவிழாவில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவதற்காக ஆலய அறங்காவலர் சபையினரின் விசேட அழைப்பின் பேரில் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
அவரது பயணத்திற்குத் தேவையான விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டதுடன், பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா நிகழ்வுகளில் அவர் ஆன்மீக உரைகளை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் கல்முனைப் பிரதேச மக்களின் சார்பில், நாகராஜா சனாதனனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு கல்முனை மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்தது.
மேலும், கல்முனை நெட் ஊடக வலையமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினர் இரா. விஜயகுமாரன் மற்றும் அவரது துணைவியார், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் சனாதனனை அன்புடன் வரவேற்று, அவர் தங்கியிருக்கும் காலம் முழுவதும் தேவையான ஒத்துழைப்புகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.
இளம் வயதிலேயே தனது ஆழமான ஆன்மீக அறிவாலும் எளிமையான சொற்பொழிவு நடையாலும் பலரது பாராட்டைப் பெற்றுவரும் நாகராஜா சனாதனனின் இந்த வெளிநாட்டு ஆன்மீகப் பயணம், உலகத் தமிழர்களிடையே அவரது ஆன்மீகப் பணிக்கு மேலும் சிறப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
























