சிவகுமார் M

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘M. G. மகேஷா ஆயுர்வேத மருத்துவமனை’ நேற்று (15 ஜூலை 2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான E. ஸ்ரீநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் டாக்டர் எம். ஏ. நஃபீல் முதன்மை விருந்தினராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் பீட குடும்ப மருத்துவப் பேராசிரியர் கே. அருளானந்தம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக மதுவரி திணைக்கள தலைமை காரியாலய ஓய்வுநிலை பிரதி ஆணையாளர் S. ரஞ்சன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் தினேஷ் மற்றும் மாநகர சபை ஆணையாளர் தனஞ்செயன் ஆகியோர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், இப்பகுதி பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கு நீண்டகாலமாக இருக்கும் தீரா நோய்களைச் சுதேச மருத்துவம் மூலம் குணப்படுத்தும் உன்னத நோக்கோடு, அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவ அதிகாரிகளின் எண்ணக்கருவில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நாள்பட்ட பிணிகளுக்குப் பக்கவிளைவுகளற்ற முழுமையான தீர்வை வழங்குவதால், இந்த மருத்துவமனை இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைகள், நோய்க்கான அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, உடலையும் மனதையும் சமநிலையில் பேண உதவுகின்றன. இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறைகளைத் தற்கால அறிவியல் நுட்பங்களுடன் இணைத்து வழங்குவதே இம்மருத்துவமனையின் சிறப்பம்சமாகும்.

இம்மருத்துவமனையானது கீழ்வரும் ஆறு மருத்துவ அதிகாரிகளின் கூட்டு எண்ணக்கருவிலும் பங்களிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இம்மருத்துவமனையின் இயக்குநர்கள் குழுவாக இருந்து செயற்படுவதோடு, மருத்துவமனைக்கான மூலோபாய ஆலோசனைகளையும் வழங்கி வழிநடத்தவுள்ளனர்:

டாக்டர் எஸ். உதயானந்தன் [BSMS, MD (சித்த மருத்துவம் - இந்தியா), வர்மா மற்றும் யோகா டிப்ளோமா] – ஆலோசகர் மருத்துவர் (Consultant Physician)

டாக்டர் டி. குவிதாகரன் [BSMS, MSc (GWUIM)] – மூத்த மருத்துவ அதிகாரி (தரம் I)

டாக்டர் பி. நிஷாந்தன் [BSMS, Dip in ABC&P] – மருத்துவ அதிகாரி

டாக்டர் வி. கோவிதா [BSMS (கிழக்குப் பல்கலைக்கழகம்)]

டாக்டர் ஷோபனா சதாசிவம் [BSMS (கிழக்குப் பல்கலைக்கழகம்)]

தேசமான்ய லயன் எம். சுதாகரன் [HNDA, PGD, MBA, MJF, MAF, JP]

பிராந்திய மக்களின் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், இந்த இயக்குநர்கள் குழுவின் ஆலோசனைகளின் கீழ் தரம்மிக்க சுதேச மருத்துவச் சேவைகளை வழங்க மருத்துவமனை முழுமையாகத் தயாராகவுள்ளது.