(ஷனா)
கிழக்கு மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயம் ஐந்து இடங்களை பெற்று முதல் நிலை வலயமாக தெரிவாகியுள்ளது.அதேவேளை, மூன்று இடங்களைப் பெற்று திருகோணமலை கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், இரண்டு இடங்களைப் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் தலா ஒவ்வொரு இடங்களைப் பெற்று திருக்கோவில் மற்றும் கிண்ணியா கல்வி வலயங்கள் நான்காம் நிலையைப் பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் 23ம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று வலய மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் பயிற்சி வழங்கிய ஆசிரிய ஆலோசகர் எம்.வை.எம்.கதாபி, சிரேஷ்ட விஞ்ஞான ஆசிரியர் நவாஸ் மற்றும் ஆசிரியைகளான திலக்சினி, ஆஸ்மி கபூர், முசவ்விரா, அஜ்மினா உள்ளிட்டோரின் சேவையை கல்வி சமூகம் பாராட்டியுள்ளது.
அதேபோன்று, இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினருக்கும் நன்றியும் பாராட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைத்து வழிநடத்திய விஞ்ஞானப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.என்.எம்.மஸீன் அவர்களுக்கும், அத்துடன் முழுமையான வழிகாட்டுதலை வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் கல்வி சமூகத்தினரால் நன்றிகளும் பாராட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

