மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்த குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் உள்ளது என கூறி போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி, குழந்தைகளை வைத்து யாசகம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது, புற்றுநோய் சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயை பார்வையிடுவதற்காக, பதுளை பகுதியில் இருந்து தந்தையுடன் இரண்டு குழந்தைகள் மட்டக்களப்பு நகருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 3 வயது ஆண் குழந்தையும் 5 வயது பெண் குழந்தையும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தேகநபர் பயன்படுத்தியதாக கூறப்படும் அடையாள அட்டை மற்றொருவருக்குச் சொந்தமானது எனவும், அது 2023 ஆம் ஆண்டில் காணாமல் போயிருந்தது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், அந்த அடையாள அட்டையை பயன்படுத்திய நபர் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது மனைவி மாத்தறையில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சந்தேகநபர் தமது மனைவிக்கு நோய் உள்ளது என கூறி பல இடங்களில் யாசகம் பெற்று வந்ததாகவும், அவருக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அனுராதபுரம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர் மீது முறைப்பாடுகள் இருப்பதுடன், ஏற்கனவே பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.