காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“குளோபல் சுமூத் புளோட்டிலா” (Global Sumud Flotilla) எனப்படும் சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் முயற்சியில் கலந்து கொண்டிருந்த சமீரா, காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, அந்தக் கப்பல் அணியை இஸ்ரேலிய கடற்படை சர்வதேச கடற்பரப்பில் மறித்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களை கைது செய்திருந்தது.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், கைது செய்யப்பட்டிருந்த சர்வதேச ஆர்வலர்களை விடுவித்து நாடுகடத்தும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. அந்த அடிப்படையில், சமீரா மஹ்பூப்தீனும் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவரை விடுவிப்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சு பல்வேறு ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட ‘அதலா’ (Adalah) சட்ட உதவி அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்டிருந்த பலர் தெற்கு இஸ்ரேலின் எய்லாட் (Eilat) நகரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் வழியாக தங்களது நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

