( வி.ரி.சகாதேவராஜா)
இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான இரண்டாம் ஆண்டு கம்பன் விழா
மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில், எதிர்வரும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை கதிரவன் கலைக் கழக தலைவர் த. இன்பராசா தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கதிரவன் கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகள் இடம்பெறுகின்றன.
காலை அமர்வு “அயோத்தி அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
காலை அமர்வில் முதன்மை விருந்தினராக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் எழுத்தாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பிக்கிறார்.
தொடர்ந்து, மாலை அமர்வு “இலங்கேஸ்வரன் அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
மாலை அமர்விற்கு பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் கலந்து சிறப்பிக்கிறார்.
தமிழ் இலக்கிய மேதை கம்பனைப் போற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், புகழ் பாடல்களும் இடம்பெறவுள்ளன.
“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில், “கம்பன் கவிச்சமர்” என்ற விவாத நிகழ்ச்சி, கதிரவன் ஆலோசகர் சட்டத்தரணி அ.அன்பழகன் குரூஸ் தலைமையிலும், “கம்பராமாயணத்தில் மேலோங்கி நிற்பது உறவா? நட்பா? “என்ற தலைப்பிலான பட்டிமன்றம் கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையிலும் நடைபெறவுள்ளது.
இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
+94759175981 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த.இன்பராசா தெரிவித்தார்.
கதிரவன் கலைக் கழகம் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வுகளை “ஊர் இருந்து உலகம் வரை” எனும் கருப்பொருளில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

