நாளை “ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவ கொடியேற்றம்!
( வி.ரி.சகாதேவராஜா)
“ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின்
வருடாந்த அலங்கார உற்சவ கொடியேற்றம் நாளை (26) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் முருக பக்தர் சுப்பிரமணியம் தியாகராஜா ( இ.ஆசிரியர்) தலைமையில் மகோற்சவகால குரு சிவஸ்ரீ சுபா பாஸ்கர குருக்கள் அலங்கார உற்சவத்தை நடாத்தவிருக்கிறார்..
கொடியேற்றத் திருவிழாவுக்காக சித்தாண்டி மக்கள் சித்தாண்டிலியிருந்து 14 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வேலோடுமலையை வந்தடையவுள்ளனர்.
நடுவில் சந்தனமடு ஆற்றைக் கடந்து வரவேண்டும் .
எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் தேதி புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் அலங்கார உற்சவம் நிறைவடைய இருக்கிற து.
உற்சவ காலப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விசேட பூஜைகள், அபிஷேகங்கள், தேவாரப் பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக சுவாமி வீதி உலா, வாகன சேவைகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மேலும், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு இறை அருளைப் பெறுவதற்காக ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. உற்சவ தினங்களில் பக்தர்களுக்கான தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய தலைவர் சு.தியாகராஜா தெரிவித்தார்.
வரலாறு:
3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்தகாலத்தில் “வேலோடும் மலை” முருகன் ஆலயம் என்ற ஸ்தாபனம் தோற்றம் பெற்றது.
இது இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டியில் இருந்து 7கிலோமீற்றர் பயணித்து சந்தனமடு ஆற்றை கடந்து வனத்துக்குள் 7 கிலோமீட்டர் பயணித்தால் அடையலாம்.
அங்கு சித்தர்கள் ரிஷிகள் நமக்காக விட்டு சென்ற எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.
இன்றும் மிக சக்தி வாய்ந்த தேவ நாகங்கள் இங்குள்ள சித்தர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கின்றன. நேராக நாகங்களின் தரிசனங்களை, தெய்வீக வாடைகளை உணரலாம். இங்கிருந்து நாக லோகத்துக்கு செல்லும் பாதை உள்ளது என்ற கல்வெட்டு இங்குள்ளதாக கூறப்படுகிறது.






