சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு

பாறுக் ஷிஹான் 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில்  அதன் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு   வங்கி கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மார்க் 08 முதல் மார்ச் 31 வரையான காலப்பகுதியினை மகளிர் சேமிப்பு மாதமாக அமுல்படுத்தியுள்ளதுடன் சேமிக்கும் மகளிருக்கு பரிசுகள் வழங்கவும் அறிவித்துள்ளது.

அதற்கமைவாக   சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் சேமிக்கும் ஒவ்வொரு மகளிருக்கு வங்கியினால் பரிசுப் பொருட்களும் சாய்ந்தமருது அக்ஸா பெஷன் மால் நிறுவனத்தினால் ரமழான் பண்டிகைக்கான 30 சதவீத விலைக் கழிவு பரிசுக் கூப்பன்களும் நேற்று(9)  முதல் வழங்கி வைக்கப்படுகின்றன.

இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகவும், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவ ஃபிக்கா, கணக்காளர் ஏ. ஜே. நுஸ்ரத் பானு, தலைமைப் பீட சமுர்த்தி  முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். றிபாயா ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், வலய உதவியாளர் எம்.எஸ்.எம்.நௌஷாட், திட்ட உதவியாளர் என்.எம்.நௌஷாட், வங்கி கட்டுப்பாட்டுச் சபை தவிசாளர் எம்.ஐ. ஜூனைதா உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இதில் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மகளிர் தின சேமிப்பு மாதத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் திரியமாதா மகளிர் சேமிப்புக் கணக்கில் சேமிக்கும் ஒவ்வொரு மகளிருக்கும் சாய்ந்தமருது அக்ஸா பெஷன் மால் நிறுவனத்தினால் ரமழான் பண்டிகைக்கான 30 சதவீத விலைக் கழிவு பரிசுக் கூப்பன்களை வழங்குவதற்கான இரு நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சமுர்த்தி வங்கியின் திரியமாதா மகளிர் சேமிப்புக் கணக்கில் சேமிக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சாய்ந்தமருது அக்ஸா பெஷன் மால் நிறுவனம் ரமழான் பண்டிகைக்கான 30 சதவீத விலைக் கழிவு பரிசுக் கூப்பன்களை வழங்க அனுசரணை வழங்கியமைக்காக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சீ.எம்.ஜெலீல் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரபிக்கப்பட்டார்.

மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் சபை மகளிர் உறுப்பினர்கள் ஆகியோருக்கு மகளிர் தின சிறப்பு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது வங்கியில் மகளிர் கணக்கில் வைப்புச் செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசு மற்றும் பரிசுக் கூப்பன்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

மகளிர் தின சேமிப்பு மாதத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் சேமிப்பு செய்யும் ஒவ்வொரு மகளிருக்கு இரட்டிப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.