ஆதம்பாவா எம்.பி.யினால்

அட்டாளைச்சேனையில்

‘ரண்பிம’ வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அரசாங்கத்தின் “ரண்பிம” வீட்டுத்திட்டத்தின்கீழ், அட்டாளைச்சேனை சமூர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வினை ஆதம்பாவா எம்.பி. அட்டாளைச்சேனையில் இன்று திங்கட்கிழமை (02)  ஆரம்பித்து வைத்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் தலைமையிலும், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம். ஹமீட்டின் ஒருங்கிணைப்பிலும்,  இடம்பெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக கணக்காளர் எம்.எப்.பர்ஹான், பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் உள்ளிட்ட சமூர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட’ ரண்பிம’ வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் இந்நிகழ்வானது பாலமுனை, ஒலுவில் போன்ற இடங்களிலும் இன்று இடம்பெற்றதுடன் இம் மூன்று வீடுகள் நிர்மாணிப்பதற்காக பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுக்கான காசோலை அண்மையில் பயனாளிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.