செல்லையா-பேரின்பராசா 

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவுக்கு நாம் முன்பள்ளி மாணவர்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.  இதனை உணர்ந்து பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு முறை மூலமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரியதர்சினி சுஜிதன் குறிப்பிட்டார்.

துறைநீலாவணை களம் முன்பள்ளிக்கு 2026 இல் புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 21.01.2026 புதன்கிழமை  இந்த முன்பள்ளிக்கூட மண்பத்தில் முன்பள்ளி ஆசிரியை திருமதி பிரியதர்சினி பிரேமானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரியதர்சினி சுஜிதன் அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்டு  அங்கு மேலும் பேசுகையில்.

தற்சமயம் அரசாங்கம் சகல முன்பள்ளிகளுக்கும் பொதுவான கைநூலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சகல முன்பள்ளிகளும் மாணவர்கள் கல்வியில் விருப்பம் கொள்ளும் அளவுக்கு தமது செயற்பாட்டினை மேற்கொள்வர்.

உதாரணத்திற்கு முன்பள்ளி மாணவர்களுக்கு பச்சை மிளகாய் உறைக்கும் என்று கூறுவதை விடுத்து ஒரு பச்சை மிளகாயை எடுத்து கடிக்க வைத்து உறைப்பு என்பதை செயற்பாட்டின் மூலம் உணர்த்த வேண்டும். இத்தகைய கல்வி மாணவர்களின் உடல் உள விருத்திக்கு வழிசமைக்கும் என்றார்.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர்களான மு.இராஜகோபால்,  செல்லையா-பேரின்பராசா,  பொது சுகாதார மருத்துவமாது ஜனாபா சம்சினா ஆதம்பாவா, கிராம சேவை உத்தியோகத்தர் கா.ரசிபிரசாத் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். ஈற்றில் முன்பள்ளி ஆசிரியை திருமதி லூக்ஸிதா சுதானந் நன்றியுரையாற்றினார்.