சமூக சேவைக்கு ஒளிவிளக்காகத் திகழும் சேவையாளர் விஜயகுமாரன்!
மட்டு.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் புகழாரம்
( வி.ரி.சகாதேவராஜா)
சொந்த நிதியில் கோடிக்கணக்கில் செலவழித்து சமூக சேவைக்காக தம்மை அர்ப்பணித்து ஒளிவிளக்காகத் திகழ்பவர் எமது சேவையாளர் திரு. விஜயகுமாரன் அவர்கள். அவரைப் பாராட்டுவதில் நாம் உண்மையில் பெருமையடைகிறோம்.
இவ்வாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் இரா.முரளீஸ்வரன் புகழாரம் சூட்டினார்.
கிழக்கில் சமூகத்தின் கல்வி சுகாதாரம் சமூக சேவைகளுக்கு அடித்தளமாக விளங்கும் கால் பண்ணு நெற் ஊடக வலையமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினரும் சமத்துவ மக்கள் அமைப்பின் பணிப்பாளர் பிரபல சேவையாளர் சுவிஸ் இரா.விஜயகுமாரன்( பாண்டிருப்பு) அவர்களின் அர்ப்பணிப்பான பணியைப் பாராட்டும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி நாவலடி விடுதியொன்றில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
கல்முனை நெற் இணையத்தளத்தின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபக தலைவர் பு. கேதீஸ் ஒழுங்கமைப்பில், அதன் ஆலோசகர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா தலைமையில் இப் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ் விழாவிற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த கதாநாயகன் இரா. விஜயகுமாரனுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் இரா.முரளீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் ஜி.சுகுணன், பிரதேச செயலாளர்களான த.கஜேந்திரன் (திருக்கோவில்) , டி.ஜே. அதிசயராஜ் (கல்முனை வடக்கு), மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண கலாசார திணைக்களப் பணிப்பாளர் சர. நவநீதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு பணிப்பாளர் முரளீஸ்வரன் மேலும் பேசுகையில்.
சுவிஸில் கஷ்டப்பட்டு உழைக்கும் நிதியில் தனிப்பட்ட இலாபம் இன்றி, சமூக நலனையே இலக்காகக் கொண்டு நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் அவரது சேவைகள், அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுகின்றது.
கல்வி, சுகாதாரம், சமூக நலன் உள்ளிட்ட பல துறைகளில் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான சேவை, மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, நேர்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஏனைய அதிதிகள் “சேவை என்பது பதவியால் அல்ல; மனப்பான்மையால் உருவாகிறது. அந்த உண்மையை தனது செயல்களால் நிரூபித்தவர் கொடை வள்ளல் விஜயகுமாரன் – ஜீவா தம்பதியர்” எனக் குறிப்பிட்டனர்.
அவரது பணிகள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாகவும், சமூக மாற்றத்திற்கான ஊக்கமாகவும் திகழ்கின்றன எனவும் கூறினர்.
இந்நிகழ்வின் முடிவில், சமூக சேவையில் அவர் மேற்கொண்ட சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பொன்னாடைகள் போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சேவையின் பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் மேலும் உற்சாகம் பெறும் தருணமாக இந்நிகழ்வு அமைந்தது.
விழாவில் கல்முனை நெற் ஊடக குழம நிருவாகிகளும் கலந்து கொண்டார்கள்.






