செல்லையா-பேரின்பராசா 

உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது எதிர்கால சந்ததியினரை கல்வி நிலையில் வளப்படுத்தி அவர்களை நல்லொழுக்க பண்புள்ள பிரஜைகளாக பரிணமிக்க வைக்க வேண்டியது எமது சமூகத்திலுள்ள அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். இதனை மனதில் கொண்டு யாவரும் பேதங்களை மறந்து சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இவ்வாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் துறைநீலாவணை  வட்டார உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் குறிப்பிட்டார்.

துறைநீலாவணை மத்திய பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் அங்கு மேலும் பேசுகையில்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவாகி ஏழு மாதங்கள் உருண்டோடி விட்டது. இக் காலப்பகுதியில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தூர்ந்து போன நிலையில் காணப்பட்ட துறைநீலாவணை அண்ணா சனசமூக நிலைய கட்டிடம் எண்பது இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடத்தில் ஆங்கில மொழி மூலமான முன்பள்ளி வெகு விரைவில்  ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு பேருதவியாகவுள்ள எமது தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்ஜிக்கு நாம் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

இந் நிகழ்வில் துறைநீலாவணை மகாவித்தியாலய. அதிபர் சா. கிருபைராசா,  ஓய்வுநிலை அதிபரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான செல்லையா-பேரின்பராசா, பாடசாலை நூலகர் ந.சுசீலன், ஆசிரியர் சா.கருணாநிதி, சமூக செயற்பாட்டாளர் எஸ். இளந்தீபன், கிராம சேவை உத்தியோகத்தர் சுரேஸ்,  துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபை உக்கிராணக்காரர் அருட்பணி எஸ். இளங்கோ ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இவ் விழாவில் 30 வருட காலம் முன்பள்ளி ஆசிரியைகளாக பணியாற்றும் சா.தவமலர், ஆ.சறோசாதேவி ஆகியோர் அதிதிகளால் பாராட்டப்பட்டனர்.