காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கையின் 28 வது தேசிய வீரமானிடர் விருது விழாவில் காரைதீவு ராவணா அமைப்பின் தலைவரும், ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான தவராஜா லவன் வீர மானிடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் அந்த அமைப்பைச் சேர்ந்த 15 வீரர்களுக்கும் இவ் விருது வழங்கப்பட்டது.
பொதுமக்கள் வீரச் செயலுக்கான மன்றம் இலங்கையின் 28 வது தேசிய வீரமானிடர் விருது விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நேற்று (11.) சனிக்கிழமை பத்தரமுல்லை மிஹிகந்த மெதுர, காணிச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலகத்தின்
பிரதிநிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம் ஐஎச்..சர்பின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது தத்தமது உயிருக்கு ஏற்படும் ஆபத்தை பொருட்படுத்தாமல் பொது மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்ற களத்தில் நின்று பொதுநலம் கருதி செயற்பட்ட நபர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த வருடம் காரைதீவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்திரத்தில் பயணித்த மதரஸா மாணவர்களையும் பொது மக்களையும் மீட்பு பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்பட்ட ராவணா அமைப்பின் தலைவர்
தவராஜா லவன் உட்பட 15 பேருக்கு தேசிய வீர மனித விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இச் சம்பவத்தோடு தொடர்புடைய இன்னும் சில அமைப்புகளுக்கும் இவ் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.




