பித்தாகி பிதற்றுகின்றேன்…
-பூவை சரவணன்-

ஆண்டுகள் இருபதைக்கடந்தாலும்
ஆறிடுமோ எம்மிதயம்
வேண்டுதல் பலசெய்து
விளைய வைத்தனம்செல்வம்
தூண்டிலில் பட்டமீன்போல
துடிதுடித்து சென்றனரோ?

பொங்கிவந்த கடலலையில்
புரண்டு விழுந்தனரோ
பொல்லாத கடலரக்கன்
கல்மனம் படைத்தவனே
கல்லா மழலைசெல்வங்களை
கரைகடந்து கவர்ந்தனனே

அஞ்சன மைதீட்டிமுக
அழகுபார்க்கும் மூத்தவளும்
பிஞ்சாய்பூத்த இளையவளும்
பிரியாவிடை பெற்றுஎனை
பித்தாக்கி சென்றனரே
பேனா முனைகொண்டு

முத்தான செல்வங்கள்
முழுமதியாய் எழுந்துவர
கத்தும் கடலலையில்
காணாமல் போனாரோ
எத்தனை இளசுகளை
இழந்து தவிக்கின்றோம்

போதாக் குறைக்குஅக்கால்
பொல்லாத யுத்தமொன்று
நில்லாமல் தொடர்ந்து
நிலைகுலைய வைத்ததுவே
இனவாதயுத்தம் எழுந்ததனால்
எத்தனைபேரை இழந்துவிட்டோம்

போர் முடிந்ததென்று
புலன்சற்று மறந்தாலும்
புதைகுழி காலாச்சாரம்
பொங்கி எழுகிறது
இன்னும் எங்கெங்கோ
இறைவனும் மறந்துவிட்டான்.