இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குவிதி கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாகவும் வெளிநாட்டு கடன்கள் தொடர்பாகவும் இங்கே பேசப்படுகின்றது. இது வளமான எழில் மிக்க நாடாகும். ஆனால் பொருத்தமான நிகழ்ச்சி நிரல் இன்றி வெளிநாட்டவர்களிடம் கையேந்தும் நிலையிலேயே நாடு இருக்கின்றது.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் அரசியல் அதிகாரங்களை முன்னிருத்தி அவர்களுக்கு தேவையான வேலைகளையே செய்தார்களே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பது தற்போதைய பொருளாதார பின்னடைவு எடுத்துக் காட்டுகின்றது.

எவ்வாறாயினும் இனவாத, மதவாத சிந்தனை கொண்ட அரசாட்சி நடப்பதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும். இந்த நாட்டு மக்களை தெளிவான சிந்தனையோடு ஆட்சியாளர்கள் அனுகவில்லை.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் போராட்டம் முதன் முதலில் இடம்பெற்ற, இந்தியாவில் அத்திப்பட்டி கிராமம் போன்று அழிக்கப்பட்டு காணாமல் போன கிராமமாக திருக்கோவில் பிரதேசத்தில் வயலூர் கிராமம் அமைந்துள்ளது.

இதற்கு 38 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்க ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன கிராமமாக இது இருக்கின்றது.

1985 ஓகஸ்ட் 25ஆம் திகதி யுத்த நிறுத்த சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அப்பாவி விவசாயிகள் கொல்லப்பட்டு கிராமமே அழிக்கப்பட்ட கிராமமாக இது உள்ளது.

இனிமேலும் இன ரீதியிலான அடக்குமுறை இருக்கக் கூடாது என்று கோருவதுடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்காக நான் இந்த சபையில் அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன்” என்றார்.

You missed