திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதில் புதிய கட்டுப்பாடு!

-ம.கிரிசாந்-

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை சீரமைத்தலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தலும் தொடர்பான விசேட கூட்டமொன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் முகமாகவும் மாலை நேரங்களில் மைதானங்களில் மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் ஆலயங்களுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் முகமாகவும்,

திருக்கோவில் கல்வி வலயபிரதேசத்தில் தரம் 09 மற்றும் 09 இற்கு உட்பட்ட வகுப்புக்களை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வெள்ளிகிழமைகளில் மாலை 4.00க்கு பின்னரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும் வகுப்புக்களை நடத்துவதில்லை எனும் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டு 25.07.2023 முதல் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமென தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மதத்தலைவர்கள், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் கல்விநிலைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.