பைஷல் இஸ்மாயில் –

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம் வீசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி ரோசன் அக்தாரினால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கல்முனை மாநகர ஆணையளர் உள்ளிட்ட எட்டு பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (02) செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்சார் மன்றில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக கல்முனை நீதவானினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த வழக்கு செப்டம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.