(ஷனா )
மருதமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் நெறிப்படுத்தலில், வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. சத்தார் ஹாஜியார் தலைமையில் மருதமுனை பொது நூலகத்தில் (26) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாசகர் வட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் நூலக அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது, நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன், வாசகர் வட்டத்தின் நோக்கங்கள், அதன் சமூகப் பங்களிப்பு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
எதிர்வரும் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூல் அறிமுக நிகழ்ச்சிகள், நூல் விமர்சனங்கள், வாசிப்பு மற்றும் அறிவுப் போட்டிகள், பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், மாணவர்களின் நூலகப் பயன்பாட்டை அதிகரிக்கும் செயற்பாடுகள், நூலகத்தின் நவீன டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
அத்துடன், மருதமுனை பொது நூலகத்தின் பெளதிக வளங்களை மேம்படுத்துதல், வாசகர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் சமூக பங்களிப்பை வலுப்படுத்துதல் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.எம். மஸ்றூபா , ஊடக இணைப்பாளர் றாசிக் நபாயிஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர்எம்.எல்.எம்.ஜமால்தீன் ஜே.பி , எம்.எச்.எம். விரிவுரையாளர் அல்-இஃஸான் உட்பட பொது நூலக அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் வாசகர்கள், பொது நூலக உத்தியோகத்தர்கள், மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடல், மருதமுனை பொது நூலகத்தின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், சமூகத்தில் வாசிப்புப் பண்பாட்டை ஊக்குவிக்கும் புதிய செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் பயனுள்ளதொரு தளமாக அமைந்தது.









