பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது!
காரைதீவு பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம்
( வி.ரி.சகாதேவராஜா)
பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது.
உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும் என்பது எம்மைப் போன்ற வருமானமற்ற சபைகளுக்கு அறவே பொருந்தாது.
இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் வை.கோபிகாந் ஆக்ரோஷமாக கூறினார்.
காரைதீவு பிரதேச சபையின் புத்தாண்டின் முதல் அமர்வும் ஏழாவது அமர்வும் நேற்று (13) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 20 வீதத்தை அந்த உள்ளூராட்சி சபைகளே வழங்க வேண்டும் என அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவு, சமூக நீதி மீது வைக்கப்பட்டுள்ள நேரடி தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வருமானமின்றி, மத்திய அரசின் மானியங்களிலேயே மூச்சு விடும் உள்ளூராட்சி சபைகளிடம், “சம்பளச் சுமையையும் நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறுவது,
பிச்சை எடுப்பவர்களிடம் பிச்சை கேட்கும் அரசியல் வஞ்சகம் அல்லாமல் வேறெதுவும் அல்ல.
உள்ளூராட்சி சபைகள் அரசின் ஒரு அங்கமே.
அவற்றின் ஊழியர்களின் சம்பளப் பொறுப்பு அரசுக்கே உரியது.
அதை விட்டு விட்டு பொறுப்பைத் தள்ளிவிட்டு அதிகாரத்தை மட்டும் பிடித்துக் கொள்ளும் ஆட்சி எவ்வாறு மக்களாட்சியாக இருக்க முடியும்?
மேலும் ஆதம்பாவா எம்.பிக்கு காரைதீவு என்றால் கசக்கிறதா? எந்த விடயத்திலும் காரைதீவை இரண்டாம் பட்சமாக பார்க்கிறார். காரைதீவு என்ற சொல் அவரது வாயில் வருவதில்லை. பாரபட்சம் ஊழல் இல்லாத அரசாங்கம் என்கிறார்கள். ஆனால் நடப்பது மாறாக இருக்கிறது.
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் எமது ஏழாம் பிரிவு முற்றாக பாதிக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாவா தயவில் வந்து பிரஜா சக்தி உறுப்பினர் சொன்னார் என்பதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச நிவாரணம் கிடைக்கவில்லை. இது அநியாயம்? என்றார்.
எனவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா எமது காரைதீவு பிரதேச சபைக்காவது இந்த 20 வீத அறவீட்டை தவிர்க்க வேண்டும்.
தவிசாளர் சு.பாஸ்கரன் பேசுகையில்..
இந்த 20 வீத நிதிப் பங்களிப்பினால் எமது சபைக்கு மாதம் 9 லட்சம் ரூபாய் செலவாகிறது. அதனை அப்படியே எம்மிடம் விட்டால் பல அபிவிருத்தி வேலைகளை எம்மால் எமது பிரதேசத்தில் செய்ய முடியும்.
மாறாக இந்த நிலை நீடித்தால் நான்காம் மாதம் கூட்டம் கூடக்கூட முடியாத நிலை தோன்றும் என்றார்.
அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினர் ஏஆர்எம்.ஹில்மி உரையாற்றுகையில்..
இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினரின் கட்சி சார்ந்த அட்டகாசம் அளவுக்கு அதிகமாக செல்கிறது. மாவடி பள்ளியில் சமுத்தி வீட்டுக்கு உரித்தான எனக்கு வாக்களித்த ஒருவருக்கு வேண்டுமென்றே அது. மறக்கப்பட்டிருக்கிறது. எம்பி ஒருபக்கம் . அதைவிட பிரஜா சக்தி உறுப்பினரின் தொல்லை மறு பக்கம்.இது நீதியா? இந்த சபை எனக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்றார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சி.சிவகுமார் உரையாற்றுகையில்..
இந்த 20 வீத அறவீட்டை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும். இன்றேல் தவிசாளர் கூறியது போன்று நான்காம் மாதம் அமர்வே நடாத்த முடியாத அவலநிலை தோன்றும்.
மேலும் பிரஜாசக்தி உறுப்பினர்களின் தொல்லை வரவர அதிகமாகிறது. என்றார்.
தே.ம.சக்தி உறுப்பினர் எஸ்.செல்வராணி பேசுகையில்.
ஏழாம் பிரிவு பிரஜா சக்தி உறுப்பினரால் அரச நிவாரணத்தை தடுக்க முடியுமா? இல்லை . அங்குள்ள கிராம சேவையாளர் மற்றும் அரச நிர்வாகத்தினரை கேட்டு பார்க்க வேண்டுமென்றார்.
தே.ம.சக்தி உறுப்பினர் பர்ஹான் பேசுகையில்..
எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை கூற வேண்டாம். எங்கே பாலம் வீதி என்று பல அபிவிருத்தி நடக்கின்றன. எனவே ஒத்துழையுங்கள் என்றார்.
இ.த.அ.கட்சி உறுப்பினர் கி.ஜெயசிறில் பேசுகையில்.
எமது உட்பட்ட பெரிய பாலம் மீள் அமைப்பு துவக்க விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது .ஆனால் தவிசாளர் அங்கு போயிருக்க வேண்டும். உண்மையில் அது
மாவடிப்பள்ளி பாலம் அல்ல .அது காரைதீவுக்குரிய பெரிய பாலமாகும். சில ஊடகவியலாளர்களுக்கு அது தெரியாமல் இருக்கிறது. ஆதம்பாவா எம்பிக்கும் தெரியாமல் இருக்கின்றது. திருத்திக் கொள்வது நல்லது என்றார்.


