செல்லையா பேரின்பராசா

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள களுதாவளை மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக பணியாற்றிய கணபதிப்பிள்ளை சத்தியமோகன் தனது அறுபதாவது வயதில் (06.01.2026 ஆந் திகதி) பணி ஓய்வு பெற்றுள்ளார்.

களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சாவித்திரி தம்பதியினரின் புதல்வரான இவர் தனது ஆரம்பக் கல்வியை களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்திலும்,  இடைநிலைக் கல்வியை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்திலும், கல்லூரி நிலைக் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலையிலும் கற்றார்.

பட்டதாரி ஆசிரியராக 15.07.1998 ஆந் திகதி முதல் நியமனம் பெற்ற இவர் ஆசிரியராக தேத்தாதீவு மகாவித்தியாலயம் , களுதாவளை மகாவித்தியாலயம் (தேசியப் பாடசாலை) , குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயம் என்பவற்றில் பணியாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்  26.01.2012 இல் சித்தியடைந்து குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் பணியாற்றி , இறுதியாக களுதாவளை மகாவித்தியாலயத்தில் (தேசியப் பாடசாலை) அதிபராகப் பணியாற்றிய நிலையில் அரச சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபரான இவர் தனது பணிக் காலத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தைப் பெற்று தனது கல்வித் தகைமையை உயர்த்திக் கொண்டதுடன், பட்டப் பின் கல்வி டிப்ளோமா,  பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா என்பவற்றைப் பூர்த்தி செய்து தனது தொழில் தகைமையை உயர்த்திக் கொண்டார்.

தற்சமயம் களுவாஞ்சிகுடி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய அறங்காவல் சபையின் செயலாளராகவும், களுவாஞ்சிகுடி ஊர் தலைமையாகவும், களுதாவளையில் இயங்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான திருஞானசம்பந்தர் குருகுலத்தின் பொருலாளராகவும் சமய,  சமூகப் பணியை ஆற்றிவருகின்ற இவர் களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலய ஆசிரியை தர்மிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.