மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் அதிகூடிய 180 புள்ளிகளுடன் மாணவன் பிரணவ் சாதனை! 

( வி.ரி.சகாதேவராஜா)

 கிழக்கில் புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி  அதிகூடிய 180 புள்ளிகளை செல்வன் யோகேஸ்வரராஜா பிரணவ் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு நகர பாடசாலைகளில் மிகவும் அதிகூடிய புள்ளியாக இந்த 180 புள்ளி என்பது  திகழ்கிறது.

புனித மைக்கேல் கல்லூரியில் இம்முறை  128 மாணவர்கள் தோற்றி  52 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.

அங்கு அதிகூடிய 180 புள்ளிகளைப்பெற்ற சாதனை மாணவன் யோகேஸ்வரராஜா பிரணவ் காரைதீவைச் சேர்ந்தவர்.

இவர் மட்டக்களப்பு டெலிக்கொம் பிராந்திய முகாமையாளர், பட்டயப் பொறியியலாளர் யோகேஸ்வரராஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீ சரண்யா ஆகியோரின் புதல்வர் ஆவார்.

இவர் கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி முதலாவது காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ராமகிருஷ்ணனின் பேரனுமாவர்.

குறிப்பாக சாதனை மாணவன் யோகேஸ்வரராஜா பிரணவ்வின் தந்தையார்  யோகேஸ்வரராஜா அன்று தான் கற்கும்போது,  இதே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.