நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அலுவலகமும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமும் இணைந்து இந்த தேசிய நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்துகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் தேசிய நேர்மை வார நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வின் போது தேசிய நேர்மை பிரமாணம் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நன்னடத்தை விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.அரச சேவையின் தரம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, ஊழலற்ற சிறந்த நிர்வாக முறையை உருவாக்குவதே இந்த தேசிய நேர்மை வாரத்தின் பிரதான நோக்கமாகும்.
நேர்மை என்பது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய கண்காணிப்பு ஆகியவற்றுடன் மனசாட்சிக்கு இணங்க வெளிப்படையாகவும் தார்மீக அடிப்படையிலும் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதை வலியுறுத்துவதாகும்.இந்த வாரத்தில் தினந்தோறும் வெவ்வேறு கருப்பொருள்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.
ஜூலை 27 ஆம் திகதி நிறுவன ரீதியான நேர்மை, ஜூலை 28 ஆம் திகதி நிதி, டிஜிட்டல், தொழில்முயற்சி மற்றும் தொழில்நுட்ப நேர்மை, ஜூலை 29 ஆம் திகதி ஆன்மீக, தார்மீக, கலாசார மற்றும் சமூக நேர்மை, ஜூலை 30 ஆம் திகதி செயற்பாடு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் உழைப்புசார் நேர்மை, ஜூலை 31 ஆம் திகதி சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான நேர்மை ஆகியவை மையப்படுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் அனைத்து அரச நிறுவனங்களிலும் இயங்கும் உள்ளக அலுவல்கள் பிரிவுகள் ஊடாக, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
கியூஆர் குறியீடு, மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி மற்றும் இணைய வழிகள் மூலம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் மீதான நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தினால் விசேட டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.















