எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் நாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை திறம்பட எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி மற்றும் தேசிய கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எதிர்பார்க்கப்படும் எல்-நினோ நிலைமையால் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றை சமாளிக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவை விவசாயம், குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளுக்கு சமநிலையாக பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016–2017 காலகட்டத்தில் நிலவிய எல்-நினோ சூழ்நிலையை ஒத்த நிலைமை உருவாகக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அதற்கேற்ப விசேட நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக விவசாய நடவடிக்கைகளை வழமையை விட சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகம், உணவுப் பாதுகாப்பு, விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான திட்டங்களை விரைந்து தயாரித்து சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்தச் சூழ்நிலை போன்ற வெளிப்புற சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதைப் போலவே, இந்த உலகளாவிய காலநிலைச் சவாலையும் முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் திறம்பட சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளியிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.