(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்குமாறு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரட்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

சாய்ந்தமருது நகர சபை தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் ஏற்பாட்டில் அவரது பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, முன்னாள் பிரதேச செயலாளரும் ஓய்வுநிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது- மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் செயலாளர் அப்துல் அஸீஸ், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மட், டொக்டர் ஷிஹாப் ஆகில் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் பர்ஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கென தனியான நகர சபையை ஸ்தாபிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி, சட்ட வலுவுடையது எனவும் 02 மாத காலத்தில் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்து, சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டு கடந்த மே மாதம் 07 ஆம் திகதி உச்ச நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதையடுத்து சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஓர் அங்கமாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரட்ன அவர்களுடனான இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சாய்ந்தமருது நகர சபை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அங்கிருந்தவாறே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ளார்.

சாய்ந்தமருது நகர சபைக்கான அலுவலகத்தை தற்காலிக இடம் ஒன்றில் அவசரமாகத் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளல், அதன் ஊடாக நிர்வாக விடயங்கள் மற்றும் சேவைகளை முன்னெடுப்பதற்கான பௌதீக மற்றும் இயந்திர வசதிகளையும் ஆளணியினரையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரை அறிவுறுத்தும் கடிதத்தை உடனடியாக அனுப்புவதற்கும் அங்கு அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விடயங்களை கண்காணிப்பு செய்வதற்காக விரைவில் சாய்ந்தமருதுக்கு தான் விஜயம் செய்வதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பட்டார்.