கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் ; கொட்டும் மழையிலும் அதிகமானோர் பங்கேற்பு
பாறுக் ஷிஹான்
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.
இதன்படி இம்மாவீரர் துயிலும் இல்லத்தில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் வகையில் எதுவித இடையூறும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள், அரசியல்வாதிகள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு தமிழ் மக்களின் உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.


















