இனவாதத்தை தூண்டி மக்களை பிரித்து உசுப்பேற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் உரை இன நல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்முனைத்தொகுதி தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மு. இராஜேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று அம்பாறை கச்சேரியில் கிழக்கு மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் கட்சி சார்பாக சமர்ப்பணம் செய்ய சென்றபோதே அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் தற்கால சந்ததியிடமும் இனவாத நச்சு விதையை விதைக்க ஆரம்பித்துள்ளனர்.

அவர் தேசிய நல்லிணக்கத்திற்கு ஒவ்வாத பிரசாரத்தை பாராளுமன்றில் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பென்பது தமிழரின் தாயகம். இதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இடையில் வந்த ஹிஸ்புல்லா இரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கைப் பாணியில் பூச்சாண்டி காட்ட முனைவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

1983, 1990இல் இடம்பெற்ற இன வன்முறைகளை நாம் அறியாதவர்களா? திராய்க்கேணி, வீரமுனை, உடும்பன்குளம் பகுதியில் இராணுவத்துடன் இணைந்து அவர்கள் நடாத்திய காட்டுத் தர்பாரில் ஓடாத இரத்தமா இனி ஓடப்போகிறது? யாரிடம் பூச்சாண்டிகாட்டுகிறார்கள்.

கிழக்கில் எமது ஆட்சியில் முதலமைச்சர் தொடக்கம் பலதையும் விட்டுக்கொடுத்தோம். இதெல்லாம் ஞாபகமில்லையா? மறந்துவிட்டார்களா? இரத்தம் ஒன்றும் எமக்கு புதிதல்ல.

இன நல்லிணக்கதிற்கான வரவுசெலவுத்திட்டம் என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் அங்கிருக்கக்கூடிய ஹிஸ்புல்லா இன நல்லிணக்கத்திற்கு விரோதமாக பேசுகிறார்.

இது தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகமானது என்ற அடிப்படையில் நடவடிக்கை அவசியம்.

சாதாரணமான ஒருவர் பேசியிருந்தால் தேசிய அமைதிக்கு குந்தகமாகப் பேசினார் என்றுகூறி சட்டநடவடிக்கையே எடுத்திருப்பார்கள் என்றார்.

இதுகுறித்து, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் காரைதீவுப் பிரதேச அமைப்பாளரும்  சமுக சேவையாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கருத்துரைக்கையில்:

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரத்த ஆறு ஓடும் எனச்சொல்வது உண்மைதான். அவர் இனவாதத்தைக் கக்கி வாக்குகள் தேடும் படலம் தற்போது தேர்தல் ஒன்று வந்திருக்கிறது என்பதை கட்டியம் கூறிநிற்கிறது.

இதனை முஸ்லிம் சகோதரர்கள் அறியாமலில்லை. அதற்காக அவர்களை ஒட்டுமொத்தமாக பழி சுமத்தமுடியாது.

இது தனியே ஹிஸ்புல்லாவின் கருத்தாக மாத்திரம் எடுத்து நாம் பார்க்க வேண்டும் என்றார்.

-காரைதீவு  நிருபர் சகா

By admin