தமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம்…

– மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் –

எமது தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு அமைவாக மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்படாமலும், தமிழ்த் தேசியம் சிதையா வண்ணமும் எமது அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் கன்னி அமர்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக அனைவரையும் வரவேற்று விளம்பி வருட புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு என்னை முதல்வராக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும், இதர சக்திகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆறுகள் ஒருபோதும் பின்நோக்கிப் பாய்வதில்லை. அவை முன்நோக்கியே பாய்கின்றன. இலங்கையின் உள்ளுராட்சி வரலாற்றில் பல்வேறு படிநிலைகளையும் கடந்து அரைநூற்றாண்டை சென்றடைந்துள்ள மட்டக்களப்பு மாநகர சபையை எனது தந்தையார் க.தியாகராஜா உட்பட காலத்திற்குக் காலம் மக்களால் தெரிவு செய்ய்ப்பட்ட பிரதிநிதிகளும், விசேட ஆணையாளர்களும் நிர்வகித்து அவர்களால் இயன்ற நற்பணிகளைச் செய்து இன்று எம்மிடம் கையளித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாங்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறு கொள்கைப் பிரகடணங்களுடன் இம் மாநகரை முன்னேற்ற வேண்டும் என்ற பொது நோக்கோடு சேவை செய்வதற்கு எமது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். அந்த வரியிறுக்கும் வாக்காளர்களையும் அவர்களது குடும்பங்களையும் நினைவிலிருத்தி அவர்களுக்கும் எனது வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான விசேட ஆற்றல்கள், வளங்கள், திறமைகள் இருப்பதன் மூலமே மக்கள் இவர்களை இனங்கண்டு தெரிவு செய்துள்ளனர். உங்களது சுயம் அல்லது தனித்துவம் இழக்கப்படாமலும், மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்படாமலும் எமது பணிகளைச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கிழக்கின் கேந்திரமாக மடட்டக்களப்பு மாநகரம் வரலாற்றுக் காலம் தொடக்கம் திகழ்ந்து வந்துள்ளது. இடைக்காலச் சூழல்கள் அதன் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தியதால் வளர்நிலையிலேயே நாம் இன்றும் இருக்கின்றோம். இதனை அடுத்த கால நிர்வாகப் பகுதிகளில் நாம் வளர்த்தெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம்மிடமே உள்ளது. இதனை மறக்காது அனைவரும் அபிவிருத்தித் திட்டங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மாநகரின் அடிப்படைத் தேவைகள், உடனடித் தேவைகள், நிலைபேறான தன்மையுள்ள நிரந்தரத் தேவைகள் முதலான அனைத்தையும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பட்டியலிட்டு முன்னுரிமை அடிப்படையில் முறைப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு தங்க மூளையை விட இரண்டு வெள்ளி மூளைகள் சிறந்தது என்ற கருத்தக்கமைய அனைவரின் ஒத்துழைப்பே வெற்றியைத் தரும். நாங்கள் எமது தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு அமைவாக தமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம். அதற்காக, அதனை வெற்றிபெறச் செய்ய அனைவரின் ஆலோசனைகளும் உதவும்.

இதனை வலுவூட்ட மாநகரில் வசிக்கும் பல்துறை சார்ந்த வல்லுனர்கள், புத்திஜீவிகள் கொண்ட ஆலோசனை சபைகளை அமைக்கவுள்ளோம். அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகளை திட்ட வடிவாக்க ஒரு திட்ட வடிவமைப்புக் குழு ஒன்றையும் உருவாக்க எண்ணியுள்ளோம்.

பெண்கள் நேய நகரம், பசுமை நிறைந்த குளி0ர்நகரம், ஆரோக்கியம் நிறைந்த சுகவாழ்வு சமுதாயம், நுன்கடன் பழுவற்ற பொருளாதார அபிவிருத்திக் குடும்பங்கள், கல்வி, பண்பாடு, உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் அபிவிருத்தி, மத்திய மாகாண அரசுகளுடன் இணைந்து அபிவிருத்தி, புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளுடனான அபிவிருத்திப் பங்களிப்பு, முன்னணி நகரங்கள், நாடுகளுடன் அபிவிருத்தி புலமைப் பங்கீடு, கழிவகற்றல், வடிகால் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை சீரமைத்து மேம்படுத்தல்., மாநகரப் பணிக்குழுவினரின் வேலைத் திறனையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தல், அரச திணைக்களங்களின் உதவிகளை முழுமையாகப் பெறுதல், துறைசார் அபிவிருத்திகளை வழங்கும் நிதி மூலங்களைப் பெற்றுக் கொள்ளல், நூலகம், பாலர் பாடசாலை, பொதுச் சந்தை பராமரிப்பு முதலியவற்றைத் தரமுயர்த்துதல், மயானங்கள், பூங்காக்கள் மற்றும் தாய் சேய் நலன் சார்ந்த நிலையங்களை விருத்தி செய்தல், சர்வதேச தரம் வாய்ந்த பண்பாட்டு மையமொன்றை உருவாக்குதல், மக்கள் பிரதிநிதிகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளல்

போன்றனவும் இவை போன்ற கால, தேச வர்த்தமான நிகழ்வுகளுக்கேற்ப அபிவிருத்திகளை முன்னெடுத்து அனைவரது ஒத்துழைப்புடன் இந்த மாநகரை முதன்மையாக்க பாடுபட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.

By admin