கொலை மிரட்டல் களுக்கு : தான் அஞ்சாமல் நீதிக்காக போராடுவேன்.8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு எதிராக ஆஜராகும் பெண் வழக்கறிஞர் ..தீபிகா ரஜாவத் உறுதி………

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு எதிராக ஆஜராகும் பெண் வழக்கறிஞர் தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக அச்சம் தெரிவித்துள்ளார். தீபிகா ரஜாவத் என்ற அந்த பெண் வழக்கறிஞர் தாம் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம் அல்லது பலாத்காரத்திற்கு உள்ளாகலாம் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக வழக்கு விசாரணையில் ஆஜராக கூடாது என்று மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் நீதிக்காக போராட இருப்பதாக தீபிகா ரஜாவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதனிடையெ பாதிக்கப்பட்ட சிறுமியின் கிராமத்திற்கு குழு ஒன்றை அனுப்ப பார் கவுன்சில் முடிவு எடுத்துள்ளது. பார் கவுன்சில் முன்னாள் தலைவர் தருண் அகர்வால் தலைமையில் செல்லும் அந்த குழுவில் பார் கவுன்சில் துணைத்தலைவர் எஸ்.பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சிறுமி பலாத்காரம் குறித்து விசாரணை நடத்தி 19-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.