ஏமாற்றத்துடனும் கவலையுடனும்  ஆனந்த சுதாகரனின் இரு குழந்தைகள் கனியும் சகியும்!

(டினேஸ்)

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகர் இந்த புதுவருடத்திலும் விடுவிக்கப்படாத நிலையில், அவரது பிள்ளைகள் கவலையில் உள்ளனர்

ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளான கனிதரனும் சங்கீதாவும் அண்மையில் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து, தமது தந்தையை விடுவிக்குமாறு கோரினார்கள்.

அதன்படி ஜனாதிபதியும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து புதுவருடத்தில் தமது தந்தை தம்மை வந்தடைவாரென எதிர்பார்த்ததாகவும் எனினும் தமது எதிர்பார்ப்பு ஏமாற்றமளித்துள்ளதாகவும் அவரது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

தமது தாயும் உயிருடன் இல்லாத காரணத்தால், தாம் அரவணைப்பின்றி இந்த புத்தாண்டில் வேதனையில் தவிப்பதாக ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆனந்த சுதாகருக்கு, கடந்த வருடம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனந்த சுதாகரின் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் திகதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நிர்க்கதியாகிய இரு பிள்ளைகளும், தமது தந்தைக்காக ஜனாதிபதி, வடக்கு ஆளுநர் என பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும், ஆனந்த சுதாகர் விடுவிக்கப்படாததால் இப்பிள்ளைகள் மன ரீதியாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் நிலை கண்டு வேதனைப்படுவதாக பிள்ளைகளின் அம்மம்மா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin