அவர்கள் மு.காவுடன் சேர்ந்தால் தியாகி : நாங்கள் முகாவுடன் சேர்ந்தால் துரோகியா? 

பிரதிமுதல்வர் காத்தமுத்து கணேஸ்!

இது என்ன நியாயம்? கேள்வியெழுப்புகிறார் கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வர் காத்தமுத்து கணேஸ்! – நேர்காணல்

நேர்கண்டவர்: வி.ரி. சகாதேவராஜா காரைதீவு  நிருபர் 

 
 ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரசுடன் த.தே.கூட்டமைப்பினர் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்கலாம். பழகலாம். அவர்கள் தியாகிகள். ஆனால் அதே மு.காவினருடன் நாம் கூட்டுச்சேர்ந்தால் எம்மைத் துரோகி என்கின்றனர். இது என்ன நியாயம்?

இவ்வாறு கேள்வியெழுப்புகின்றார் கல்முனை மாநகரசபையின்  பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ்.

கல்முனை மாநகரசபை வரலாற்றில் தமிழரொருவர் பிரதிமேயராகத் தெரிவானமை இதுவே முதற்றடவையாகும். கடந்த 41வருடங்களுக்கு முன்பு தம்பிப்பிள்ளை என்பார் அக்கிராசனராகவிருந்திருக்கிறார். ஆனால் கல்முனை மாநகரசபை வரலாற்றில் பிரதி மேயராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இது முதல்தடவையாகும்.

அண்மையில் நடைபெற்ற கல்முனை மாநகரசபை முதல் அமர்வில் முகா. உறுப்பினர் சட்டத்தரணி றக்கீப் 22வாக்குகளுடன் மேயர் பதவியையும் அதற்கு ஆதவளித்த த.வி.கூட்டணி உறுப்பினரான காத்தமுத்துகணேஸ் 15வாக்குகளுடன் பிரதிமேயராகவும் தெரிவானமை தெரிந்ததே.

57 வயதான அவர் எமக்கு வழங்கிய செவ்வியில் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் இவ்வாறு  பதிலளிக்கிறார்.

 கேள்வி: உங்கள் பிறப்பு மற்றும் குடும்பம் பற்றிக்கூறுங்கள்?

பதில்: நான் 1961  மே 21 ஆம் திகதி பாண்டிருப்பில்  பிறந்தேன். கல்முனை உவெஸ்லிக்கல்லூரியில் பயின்ற நான் பாண்டிருப்பிலேயே திருமணம் முடித்து 6பிள்ளைகளின் தந்தையாகவுள்ளேன்.

கேள்வி: அரசியல் பிரவேசம் பற்றிக்கூறுங்கள்?

பதில்: 2006 மாநகரசபைத்தேர்தலே என்னை அரசியலுக்கு வரவைத்தது. எந்த அனர்த்தம் வந்தாலும் பிரச்சினை என்றாலும் மக்களோடு மக்களாக நின்று சேவைசெய்துவந்திருக்கின்றேன். மக்களுக்காக் குரல்கொடுத்திருக்கின்றேன்.

கேள்வி: நீங்கள்  ஒருநாள் மேயராக இருந்ததாகக்கூறப்படுகின்றதே?

பதில்: ஆம் கல்முனை மாநகரசபைத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் தோற்றி உறுப்பினராகத்தெரிவானேன். எதிர்க்கட்சிஆசனத்தில் அமர்ந்தேன். அப்போது இன்றைய பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் மேயராகஇருந்தவர். அவர் ஒரு தடவை லீவில் வெளியே செல்லும்போது சபையை என்னிடம் நடாத்தும்படி தந்துவிட்டு சென்றார். அந்த ஒருநாள் அமர்வை நான் மேயராகத் தொழிற்பட்டு நடாத்தினேன். அதுதான் ஒருநாள் மேயர் வரலாறு.

கேள்வி: : இம்முறை பிரதி மேயராகத் தெரிவாகியுள்ளீர்களே . இது பற்றிக்கூறுங்கள்.?

பதில்: உண்மையில் இந்த வெற்றி இந்தப்பதவி எனக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்பேன். அதற்கு நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு குறிப்பாக கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் பிரதிதலைவர் ஹரீஸ் உள்ளிட்டோரை நன்றியுடன் பார்க்கின்றேன். இப்பதவி கிடைத்து மறுகணம் இங்கு மட்டுமல்ல உலகநாடுகள் பலவற்றிலுமிருந்து தெரிந்தவர்கள் வாழ்த்துத்தெரிவித்தார்கள். கல்முனையைப்பொறுத்தவரை இதுவோன்றே வழி என்றார்கள்.

கேள்வி: இப்பதவி கிடைத்தமையையிட்டு நீங்கள் மகிழ்ச்சியடைகின்றீர்களா?  ?

பதில்: நிச்சயமாக .இறைவன் தந்த வரம். வரலாற்றில் இப்பதவியை நான் முதல்முதல் அலங்கரிக்கின்றேன் என்றால் அது உண்மையில் ஒரு வரம்தானே. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட கல்முனையில் மேயரும் பிரதிமேயரும் அவர்களே வரமுடியும். இருந்தும் பிரதி மேயரை தமிழனாகிய எனக்கு மு.கா. தந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இது ஒரு வரப்பிரசாதம்.

கேள்வி: இந்தப்பதவி மூலம் எதைச்செய்ய எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: முதலில் கல்முனைப்பிராந்தியத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும். தமிழ்மக்கள் முஸ்லிமக்களை எதிர்த்தோ முஸ்லிம் மக்கள் தமிழ்மக்களை எதிர்த்தோ இங்கு நிம்மதியாக வாழமுடியாது. பிரதேசமும் அபிவிருத்தியடையாது. எதனையும் பிரிந்துநின்று சாதிக்கமுடியாது.முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்தே வாழவேண்டும். எனவே முதலில் அதனை ஏற்படுத்த என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

கேள்வி: இப்பதவி பாரியபொறுப்பு  வாய்ந்தது. இதனை எவ்வாறு கையாளுவீர்கள்?

பதில்: உண்மைதான்.  மேயர் சட்டத்தரணி றக்கீப்  பண்பானவர் படித்தவர்.இனமதபேதம் பார்க்காத அவர் மேயராகவந்ததில் மிக்கமகிழ்ச்சி. அவரது வழிகாட்டலில் எமது மக்களது தேவைகளை உணர்ந்து எமது சக உறுப்பினர்களையும் அவர்களையும் அரவணைத்தே நான் பயணிப்பேன். விமர்சனங்களை சதிகளை தடுப்புக்களை வெற்றிகொண்ட அனுபவம் நிறைய உண்டு.எனவே அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சாதனை படைப்பேன்.

கேள்வி: பிரதி மேயர் கிடைத்ததைத்தொடர்ந்து முகநூலில் தங்களைப்பற்றி தமிழினத்துரோகி எனத் தாறுமாறான விமர்சனங்கள் வெளிவந்தனவே. அது தொடர்பாக?

பதில்: அது சகஜம் தான். என்னை தமிழினத்துரோகி என்றார்கள். அதனை நான் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. த.தே.கூட்டமைப்பு முகாவுடன் சேர்ந்தால் அவர்கள் தியாகிகள் ஆனால் அதே கூட்டை நாம்வைத்தால் துரோகியா? இதென்ன நியாயம்? சிலவேளை அவர்கள் கூட்டுவைத்து பிரதிமேயராக அவர்களில் ஒருவர் வந்திருந்தால் இந்த முகநூல்காரர்கள் என்னசெய்வார்கள்? அவர்களை தியாகி என்பார்கள். அவர்கள் தானாகத்திருந்தும் வரை தமிழினம் உருப்படாது.

 

கேள்வி: த.தே.கூட்டமைப்பிலிருந்து ஏன் உங்களால் சேவைசெய்யமுடியாது?

பதில்: ஏலவே த.தே.கூட்டமைப்பில் எதிர்கட்கட்சியிலிருந்துகொண்டு எதனையும் சாதிக்கமுடியவில்லை.  தமிழ்மக்கள் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துள்ளனர்.இருப்பதையும் இழக்கவைப்பதற்கு தற்போது த.தே.கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. அதுபோலத்ததான் இம்முறையும் வரும் என்று நினைத்தே த.வி.கூட்டணியில் இணைந்து இன்று சேவை செய்யக்கூடிய பிரதிமேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளேன். இதனைக்கொண்டு முடிந்த உதவியை சேவையினை செய்வேன்.

கேள்வி: கல்முனை வாழ் த.தே.கூட்டமைப்பினர் உங்களை துரோகி என்ற சொல்கின்றனரே?

பதில்: நான்துரோகி என்றால் அவர்கள் யார்? உண்மையில் அவர்கள்தான் துரோகி. தமிழினத்திற்குவரும் வரப்பிரசாதங்களையெல்லாம் தமது சுயநலத்திற்காக தாரைவார்த்தவர்கள். அரசோடு ஒட்டிக்கொண்டு உறவாடும் அவர்கள் இதுவரை ஏன் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தைப் பெறவில்லை.

இனஒற்றுமைக்கு ஹென்றியும் எம்.பியும் பரமஎதிரிகள். தேர்தல் காலத்தில் எமது தலைவர் ஆனந்தசங்கரியை ஹிட்லர் என்று கூறியவர் இந்த எம்.பி. . த.வி.கூட்டணி தமிழினத்துரோகிகள் என்று ஹென்றிகூறினார். அவரது காலத்தில் அவரைத்தவிர நாமெல்லாம் சபையில்பேசமுடியாது. அவரது சர்வாதிகாரம்அது. அவர்கள் மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுகின்றார்கள். அவர்களுள் ஆயிரத்தெட்டு பேதங்கள். முதலில் அவற்றைக்களையுங்கள்.

எமது கட்சியை அங்கீகரிக்கவேண்டாமென்று எதிர்த்தவர்கள் அந்தக்கட்சியினர். ஆனால் இறைவனின் ஏற்பாடு நாம் 3பேர் தெரிவாகினோம்.

கேள்வி: சரி.உங்கள் கனவு என்ன?

பதில்:இந்த மண்ணைக்காக்க எனது மக்கள் தந்த ஆணைக்கு தலைவணங்குகின்றேன். மக்கள்சேவைக்காக என்னை அர்ப்பணிக்கின்றேன். நாம் பெரும்பாலும் அனைத்தையும் இழந்துவிட்டோம். எனவே இருப்பதையாவது காப்பாற்றவேண்டும். எமது தமிழ் இளைஞர்களையும் காப்பாற்றவேண்டும். அதற்காக இப்பதவியை பயன்படுத்துவேன்.

கேள்வி: இன்று த.தே.கூட்டமைப்பு முன்வைத்த 3அம்சக்கோரிக்கை தொடர்பில் உங்களால் அதனை பெற்றுக்கொடுக்கமுடியுமா?

பதில்;;:  அதில முதல்கோரிக்கை கல்முனை தமிழ் பிரதேசசெயலக தரமுயர்த்தல் என்பது. நான் தெரியாமல் கேட்கின்றேன். இப்பிராந்தியத்தில் நன்கு கற்ற மூத்த ஊடகவியலாளர் நீங்கள். தேர்தலுக்கு ஒருசில தினங்களுக்கு முன்பு நற்பிட்டிமுனையில் த.தே.கூட்டமைப்பு பிரசாரக்கூட்டத்தில் பேசிய த.தே.கூ.தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் முடிந்த கையோடு இப்பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படும் என்றுகூறியிருந்தார். இன்று தேர்தல் முடிந்து 2மாதங்கள் கடந்துவிட்டன. ஏதாவது நடந்ததா? சொன்னதைச் செய்தார்களா? இப்படிப்பட்டவர்களை இன்னமும் தமிழினம் நம்புவதா?

கேள்வி: சரி அவரை விடுங்கள். நான் கேட்பது உங்களால் முடியுமா என்று?

பதில்: நான்எனது கட்சித்தலைமையிடம் பேசி நிச்சயமாக ஒரு தீர்வைக்காணமுடியும் என நினைக்கிறேன்.

கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் இரு இனங்களும் இணைந்து யாருக்கும் தீங்கு ஏற்படாதவகையில்தான் அது முன்னெடுக்கப்படும். அபிவிருத்தித்திட்டத்திற்கு எனது ஆதரவு என்றுமிருக்கும். சபை பிரிப்பு என்பதுவரும்போது பார்க்கலாம். தமிழினத்திற்கு ஆதரவாகவே எனது முடிவிருக்கும்.

கேள்வி: சிலசந்தப்பங்களில் சபையில் தமிழ்மக்களுக்குப் பாதகமாக  சில தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற தருணம் வந்தால் உங்கள் வகிபாகம் எப்படியிருக்கும்.?

பதில்: அப்படி வராது . அப்படி வந்தால் அதற்கெதிராகக் குரல்கொடுக்கத்தயங்கமாட்டேன். எனது இனத்திற்கு விரோதமாக நடக்க எதனையும்  விட்டுக்கொடுக்கமாட்டேன். நான்பதவிவழி  பிரதிமேயரே தவிர தமிழ்உறுப்பினர்தான்.

கேள்வி: இந்தத்தேர்தலில் கல்முனை மாநகரசபையில் போட்டியிட்டிருந்தீர்கள். உங்களுக்கு த.தே.கூட்டமைப்பு பலமான போட்டியாகத் தெரியவில்லையா?

பதில்: இல்லை. அவர்கள் படு மோசமான வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இம்முறை அவர்கள் 7பேரும் 7வட்டாரத்தில் பெற்ற வாக்குகள் ஆக 9003. ஆனால் நாம் முதன்முறையாக போட்டியிட்டு 4746வாக்குகளை பெற்றுள்ளோம். மக்கள் எமக்களித்திருக்கின்றார்கள். பாருங்கள் 50வீதத்திற்கும் கூடுதலான வாக்குகள் எமக்கு வீழ்ந்திருக்கின்றன. அப்போ யாருக்கு உண்மையில் வெற்றி? தமிழ்மக்கள் தற்போது நன்றாக புரிய ஆரம்பித்துள்ளனர்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் தெரிவான ஒரு உறுப்பினர்  உங்கள் சபைத்தெரிவுகளில் நடுநிலை வகித்திருந்தார். இது கட்சிக்கொள்கைக்கு முரணில்லையா?

பதில்: நிச்சயமாக. அவர் எமது கட்சியல்ல. அவர் ஈபிஆர்எல்எவ் கட்சியைச்சார்ந்தவர். அவரது செயற்பாட்டிற்கு கட்சி நடவடிக்கை எடுக்கலாம்.

கேள்வி: உங்களது தெரிவுக்கெதிராக நற்பிட்டிமுனையில் எதிர்ப்பார்ப்பாட்டம் நடந்ததாக கூறப்படுகின்றதே?

பதில்;: அது அவர்களது தலைமைத்துவம் விட்டபிழை. ஒப்பந்தம் ஏதாவது செய்யப்பட்டதா?

இல்லை.  வினை விதைத்தால் தினை அறுக்கலாமா? மு.காவிற்கு வெட்ட றிசாட் நினைத்தார். கிணறு வெட்டப்பூதம் புறப்பட்டகதைபோல முடிவுகள் அமைந்தன. நற்பிட்டிமுனைக்கு கட்டாயம் பிரதிமேயர் கொடுக்கவேண்டும் என்பது சட்டமா? இவ்வளவுகாலமும் மருதமுனை மக்கள் பொறுமையோடு இருந்தார்களே. இன்று மேயர் கிடைத்துள்ளது.

மறுபுறத்தில் பார்த்தால் அந்தஆர்ப்பாட்டம்  தொடர்பாக தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை அற்புதமானது. உண்மையில் அவரை நான் வாழ்த்துகின்றேன். அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் முஸ்லிம்கள் தமிழ்மக்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என்று கூறியுள்ளார். இதுதான் தலைமைத்துவம். அப்படிப்பட்ட தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு கிடைத்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

மறுபக்கம் பார்த்தால் நான் ஏன் பிரதிமேயராக வரமுடியாது? தமிழர் ஒருவர் சபையில் பிரதிமேயராக வரக்கூடாதா? எந்த சட்டத்தில்; தமிழர் வரக்கூடாதென்று எழுதப்பட்டுள்ளது? வீணாக  இனவாதத்தீயை மூட்டவேண்டாம் என அவர்களை வினயமாகக்கேட்டுக்கொள்கின்றேன்.

கேள்வி: நீங்கள் முஸ்லிம்களுடன் சங்கமமாகிவிடுவீர்கள் எனக்கூறப்படுகின்றதே?

பதில்: அவர்கள் கூட்டுவைக்கலாம் கதைக்கலாம். காரைதீவில் பொத்துவிலில் நாவிதன்வெளியில் அவர்களுடன் சேர்ந்து அங்குள்ள தமிழ்உறுப்பினர்களை  புறந்தள்ளி அவர்களுக்கு துரோகமிழைத்து கூட்டாட்சி அமைக்கலாம். அது பிரச்சினையில்லை. அது துரோகமில்லை. ஆனால் நான் மு.காவுடன்சேர்ந்தால்தான் பிரச்சினை. கூடஇருக்கும் தமிழின உறுப்பினர்களைச்சேர்க்காமல் சுயநலத்திற்காக வரலாற்றுத்துரோகமிழைத்தவர்களை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள். தமிழினம் உணரத்தலைப்பட்டுவிட்டது.

எனவே எமது கல்முனை மாநகரஎல்லைக்குள் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இனமத பேதமற்ற சேவையை வழங்குவேன். எந்தப்பிரிவினையோ பிளவோ வராதபடி நடப்பேன். ஏதாவது குறைகளிருந்தால் என்னிடம் நேரடியாகவந்து கூறலாம். நிவர்த்திக்கப்படும். அனைவருக்கும் வளமான வாழ்த்துக்கள்.

 நேர்கண்டவர்: வி.ரி. சகாதேவராஜா காரைதீவு  நிருபர் 

By admin