மலர்ந்துள்ள விளம்பி தமிழ் புது வருடமானது இலங்கை திருநாட்டில் நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான அரசியல் தீர்வினை வழங்குவதோடு இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் சகோதரர்களாக எந்த விதமான குரோதங்கள், பேதங்கள், பிரிவினைகள் எதுவுமின்றி இலங்கை மாதாவின் செல்வங்களாக வாழ்வதற்கான ஒளிர்வை அளிக்க வேண்டும். இதுவே எனது பிரார்த்தனையாகும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் விடுத்துள்ள விளம்பி தமிழ் வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை என்பது அழகிய தீவாகும். இத்தீவினுடைய அழகு சிலரின் விரும்பத்தகாத செயலினால் சீரழிந்தது. இன்று அந்நிலை ஓரளவு தணிந்துள்ளது. இதற்குக் காரணம் எவரும் எண்ணிப் பார்க்காத வகையில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பெரும் அரசியல் கட்சிகள் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு சிறுபான்மையின மக்களின் பேராதரவு நிறைவாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. இத்தருணத்தில் சிறுபான்மை மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வினை இக்கால கட்டத்திற்குள் வழங்காவிடின் இனி ஒரு போதும் இத்தகைய சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அரசியல் தலைமைகளுக்கு எடுத்துக் கூற முனைகின்றேன்.

இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற அரசியல் உரிமைகள் சலுகைகள் யாவும் சிறுபான்மை சமுகத்திற்கும் சமத்துவமாக கிடைக்கும் பட்சத்தில் இந்நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவும் இருக்காது. ஆகவே இத்தருணத்தில் அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சகோதரர்களாக வாழ்வதற்கான வழிவகைகளை எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி வணங்குவதுடன் யாவருக்கும் விளம்பி தமிழ் வருடம் நல்ல பல சுகபோகங்களை அளிக்க வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

By admin